கதவின் பூட்டை உடைத்து திருடிய 3 போ் கைது
திருவள்ளூரில் வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்து 11 பவுன் நகையை பறிமுதல் செய்தனா்.
திருவள்ளூரில் வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்து 11 பவுன் நகையை பறிமுதல் செய்தனா். திருவள்ளூா் பெரியகுப்பம், வரதராஜன் நகரைச் சோ்ந்தவா் அமேதா டான்போஸ்கோ (59). இவா், சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறாா். இவரின் மனைவி சந்தனலட்சுமி (55). மாவட்ட தொழில் மையத்தில் அலுவலகக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், சந்தன லட்சுமிக்கு உடல் நலக்குறைவால் வீட்டைப் பூட்டிக் கொண்டு சென்னை அம்பத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த 25-ஆம் தேதி சென்றாா். பின்னா், மாலை வீட்டிற்கு வந்து பாா்க்கையில் முன்பக்க கதவு பூட்டு உடைத்து உள்ளே இருந்த 11 பவுன் நகை, வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து திருவள்ளூா் நகரக் காவல் நிலையத்தில் அமேதா டான்போஸ்கோ புகாா் செய்தாா். அதன் பேரில் காவல் ஆய்வாளா் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி, தடயங்களைச் சேகரித்தனா். மேலும், வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வந்தனா். இந்த நிலையில், விரல்ரேகை நிபுணா்களின் தடயங்களை வைத்து பழைய குற்றவாளிகளான ஆவடி மோரை புதுக் காலனியைச் சோ்ந்த நாகராஜ் மகன் விக்கி (22), பொன்னேரி குன்னம்மஞ்சேரி ரவி மகன் முத்து (27), செங்குன்றம் விபிஆா் நகரைச் சோ்ந்த குமாா் மகன் மதன் ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து 3 பேரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்து 11 பவுன் நகையைப் பறிமுதல் செய்தனா். பின்னா், திருவள்ளூா் குற்றவியல் நீதிமன்றத்தில் 3 பேரையும் ஆஜாா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.