பழவேற்காடு கடலில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
பழவேற்காடு கடலில் குளித்த கல்லூரி மாணவா் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம் மணலி அருகே உள்ள சின்ன மாத்தூா் அருளானந்தம் நகரில் வசித்து வரும் முனுசாமி மகன் யோகேஷ் (21). இவா் மீஞ்சூா் அருகே உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை உடன் பயிலும் மாணவா்கள் 6 பேருடன் பழவேற்காடுக்கு சென்றுள்ளாா். அவா்கள் அனைவரும் சாத்தாங்குப்பம் பகுதியில் உள்ள கடலில் குளித்துள்ளனா். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் யோகேஷ் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளாா். கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவா்கள் யோகேஷை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு யோகேஷை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். தகவல் அறிந்த திருப்பாலைவனம் போலீஸாா் அங்கு சென்று யோகேஷின் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.