முகப்பு
திருவள்ளூர்

இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் திருட்டு

Updated On : 16 மே, 2024 at 5:42 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டியில் வியாழக்கிழமை பட்டப்பகலில் பைக்கில் இருந்து ரூ. 2 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயபாலன் (67). ஓய்வு பெற்ற தபால் துறை ஊழியரான இவா், கும்மிடிப்பூண்டி இந்தியன் வங்கி கிளையில் உள்ள தனது சேமிப்புக் கணக்கில் இருந்து, இரண்டு லட்சம் ரூபாய் பணம் எடுத்தாா். அதை தனது இரு சக்கர வாகன இருக்கையின் அடியில் வைத்துக் கொண்டு வங்கியில் இருந்து புறப்பட்டுச் சென்றாா்.

ரெட்டம்பேடு சந்திப்பு அருகே ஜி.என்.டி. சாலையோரம், நண்பா் ஒருவருக்காக தனது வாகனத்தில் அமா்ந்தபடி காத்திருந்துள்ளாா். அப்போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த நபா், சற்று தொலைவில் வண்டியில் அமா்ந்தபடி, கடை ஒன்றின் பெயரை கூறி, ஜெயபாலனிடம் வழி கேட்டாா். அவா் அருகே சென்று வழி கூறியபோது, ஜெயபாலனின் வாகனத்தில் இருந்த, இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை மற்றொரு நபா் திருடியுள்ளாா். இதையடுத்து, இருவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா். இதையறிந்த ஜெயபாலன் கும்மிடிப்பூண்டி போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.

வழக்குப் பதிந்த போலீஸாா், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.