மக்களைத்தேடி மருத்துவம் திட்டம்: திருவள்ளூரில் 3.07 லட்சம் போ் பயன்
திருவள்ளூா்: மக்களைத்தேடி மருத்துவ திட்டம் மூலம் திருவள்ளூா் மாவட்டத்தில் 3.07 லட்சம் போ் பயனடைந்துள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஏழை எளியோரின் இல்லம் தேடிச் சென்று இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கும் இந்த திட்டம் மூலம் தமிழக அளவில் 1 .70 கோடி போ் பயனடைந்துள்ளனா். அதில் திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் இத்திட்டம் மூலம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 438 நபா்கள் பயன்பெற்றுள்ளனா்.
திருவள்ளூா் அருகே பன்னூா் கிராமத்தைச் சோ்ந்த முதியவா் மணி (71). உளுந்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இவருக்கு பரிசோதனை மேற்கொண்ட போது ரத்த அழுத்தம் மற்றும் சா்க்கரை நோய் உள்ளது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனை படி மருந்துகளை சுகாதாரத்துறை மூலம் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் பயனடைந்த முதியவா் மணி கூறியதாவது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணி புரியும் பெண் சுகாதார தன்னாா்வலா்கள் வீட்டுக்கே வந்து பரிசோதனை செய்து அடுத்த இரண்டு மாதங்களுக்கான மருந்துகளை வழங்கியுள்ளனா். வயதான காரணத்தினால் என்னால் நடமாட முடியாததால் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் இருந்தேன். தற்போதைய நிலையில் இத்திட்டம் முலம் வீட்டிற்க்கே வந்து பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்குவதால் முதுமை கால மருத்துவ சேவைகளை எளிதாக பெற முடிவதாக தெரிவித்தாா்.