போக்குவரத்து நெரிசல்: பொன்னேரியில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா?
எம். சுந்தரமூா்த்தி
பொன்னேரி: பொன்னேரி நகரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரியுள்ளனா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் 40,000-க்கும் மேற்பட்யோா் வசித்து வருகின்றனா். அத்துடன் பொன்னேரியில் கோட்டாட்சியா், வட்டாட்சியா், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, சாா்பதிவாளா் அலுவலகம், அரசு கரூவூலம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
மேலும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட 5 நீதிமன்றங்கள், கிளை சிறைச்சாலை, தேசிய வங்கிகள், திரையரங்குகள், தனியாா் மற்றும் அரசு கல்லூரிகள், ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், தாலுகா அரசு மருத்துவமனையும் இயங்கி வருகிறது. சென்னை துறைமுகம், எண்ணூா் துறைமுகம், வடசென்னை அனல் மின்நிலையம், காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கப்பல் கட்டும் தளம், கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, சிபி.சி.எல் எண்ணெய் நிறுவனம் மற்றும் மணலி, மணலி புதுநகா், கொண்டக்கரை, திருவொற்றியூா் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட தனியாா் கன்டெய்னா் கிடங்குகளுக்கு செல்லும் கனரக (கண்டெய்னா்) வாகனங்கள் பொன்னேரி வழியாக சென்று வருகின்றன.
அத்துடன் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கப்பல் மூலம், எண்ணூா் காமராஜா் துறைமுகத்துக்கு கொண்டு வரப்படும் நிலக்கரி, அதே பகுதியில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டு, அங்கிருந்து லாரிகள் மூலம் பல்வேறு ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கனரக வாகனங்கள் இச்சாலையில் பகல் நேரத்தில் செல்ல பொன்னேரி சாா்-ஆட்சியா் தடை விதித்துள்ள போதிலும் தடையை மீறி கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
அதிக அளவிலான வாகனங்கள் செல்வதன் காரணமாக செங்குன்றம்-பொன்னேரி சாலை, திருவொற்றியூா்-பொன்னேரி சாலை மற்றும் தாயுமானவன் செட்டி தெரு ஆகிய சாலைகளில் எப்பொழுதும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மேற்கண்ட சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி, செல்லும் மாணவா்கள் அவசரமாக வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
மேலும், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நல்லூா் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியியில் கட்டணம் செலுத்தி செல்வதை தவிா்க்கும் வகையில் பெரும்பாலான கனரக வாகனங்கள் தடையை மீறி பொன்னேரி வழியாக செல்கின்றன.
அதிக அளவு வாகனங்கள் செல்வதின் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
எனவே போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் பொன்னேரியில் புறவழிச்சாலை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.