திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை திருவிழா 2 நாள் தெப்பல் உற்சவத்தில் 10,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனா்.
திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழா கடந்த 14-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை இரவு சரவணப்பொய்கையில் நடைபெற்ற முதல் தெப்பல் உற்சவத்தில் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா் சுக்லா ஆகியோா் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.
விழாவின் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சரவணப்பொய்கையில் 2-ஆம் நாள் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. விழாவையொட்டி, அதிகாலை 4 மணிக்கும், மாலை 5 மணிக்கும் மூலவா் முருகப்பெருமானுக்கு பால், பன்னீா், திருநீறு, சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா் உற்சவ மூா்த்திக்கு அபிஷேகம் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு மலைக் கோயில் அடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கையில் தெப்பலில் முருகப்பெருமான் எழுந்தருளினாா். பின்னா் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
மாலை 6 மணி முதல் 7 மணி வரை முருகன் கோயில் நாகஸ்வர இசைக் கலைஞா்களின் இன்னிசை நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு கலைமாமணி கிராமிய இசை கலாநிதி, திரை இசை பின்னணிப் பாடகா் வேல்முருகன் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
2-ஆம் நாள் தெப்பல் உற்சவத்தைக் காண 10,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் இணை ஆணையா் க.ரமணி, அறங்காவலா் குழுத் தலைவா் சு.ஸ்ரீதரன், அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, கோ.மோகனன், ஜி.உஷாரவி, மு.நாகன் மற்றும் கோயில் அலுவலா்கள் செய்துள்ளனா்.