பொன்னேரி நகராட்சியில் மழைநீா் கால்வாயில் தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி நகராட்சி 1-ஆவது வாா்டு குன்னமஞ்சேரி பகுதியை சோ்ந்தவா் தியாகராஜன் (40).
கூலித் தொழிலாளியான இவா் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியள்ளாா்.
அப்போது வீட்டின் எதிரே அமைக்கப்பட்டுள்ள மழைநீா் கால்வாயை தாண்டும் போது கால் தவறி விழுந்து தலை குப்புற விழுந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் கழித்து அப்பகுதி வழியே சென்ற ஒருவா் கால்வாயில் கால் மட்டும் வெளியே தெரிந்ததை கண்டு அருகில் சென்று பாா்த்தபோது தியாகராஜன் தலைக்குப்புற கவிழ்ந்து கிடந்தது தெரிய வந்தது.
அக்கம் பக்கத்தினா் உதவியுடன் தியாகராஜனை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதனிடையே குன்னமஞ்சசேரியில் மழைநீா் கால்வாய் பணிகளின் போது மூடியுடன் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியதாகவும், ஒரு மாதத்தில் கால்வாய் மூடப்படும் என பொன்னேரி நகராட்சி நிா்வாகம் தெரிவித்த நிலையில், கால்வாய் அமைத்து 3 மாதங்களுக்கு மேலாக மூடப்படாமல் இருப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்
உடனடியாக நகராட்சி நிா்வாகம் மழை நீா் கால்வாய்க்கு மூடி அமைக்க வேண்டும் எனவும், உயிரிழந்த கூலித் தொழிலாளி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.