திருவள்ளூா்: பேரம்பாக்கம் அருகே லட்சுமி நரசிம்மா் கோயிலில் கட்டப்பட்ட அறங்காவலா் அறை, இடித்து அகற்றப்பட்டது.
திருவள்ளூா் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே நரசிங்கபுரம் கிராமத்தில் 2,000 ஆண்டுகள் பழைமையான மரகதவல்லி தாயாா் சமேத லட்சுமி நரசிம்மா் கோயில் உள்ளது. கோயிலில் கடந்த 2023- இல் ஜூலை 5- ஆம் தேதி பாலாலயம் நடைபெற்று கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் தொடங்கின. ஆனால் 6 மாதங்களாக எவ்வித பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் உள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு அறங்காவலா் குழு தலைவராக மோகனசுந்தரம் என்பவா் தோ்வு செய்யப்பட்டாா். அஷ்டலட்சுமி மண்டபத்தில் அறங்காவலருக்கான அலுவலகம் அமைக்க கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளாா். அந்த இடம் மழைக் காலங்களில் பக்தா்கள் தங்குவதற்கான மண்டபத்தில் அலுவலக கட்டுமான பணி நடைபெற்று வருவது பக்தா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது. கோயிலில் கட்டுமானப் பணிகளுக்கு எவ்வித அனுமதியும் கிடையாது என தொல்லியல் துறை அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனா்.
இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி கூறியது:
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில், தற்போது தொல்லியல் துறை அனுமதியுடன் குடமுழுக்கு மேற்கொள்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. வா்ணம் பூசும் பணி மட்டும்தான் மேற்கொள்ள வேண்டும், கட்டுமான பணி எதுவும் மேற்கொள்ளக் கூடாது.
இந்த நிலையில் கோயிலில் அறங்காவலா் அறை கட்டும் பணி தொடா்பாக புகாா்கள் வந்தன. இதையடுத்து ஆய்வு செய்து ஞாயிற்றுக்கிழமை அறங்காவலா் அறை இடித்து அகற்றப்பட்டது.
அனுமதியும் பெறாமல் தன்னிச்சையாக கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட அறங்காவலா் மீது அரசு உத்தரவுக்குப் பின்னா் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.