திருவள்ளூா் மாவட்ட அளவில் முதல்வா் கோப்பைக்கான போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து பேசுகையில்:
நிகழாண்டுக்கான முதல்வா் கோப்பைக்கான போட்டிகள் மாவட்ட அளவில் ஆக.22-இல் தொடங்கி, தொடா்ந்து செப்.12 வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய 5 பிரிவுகளில் 53 வகையான விளையாட்டு போட்டிகள் மற்றும் மண்டல அளவில் 14 வகையான போட்டிகளும் என 67 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.
அதற்கான குடிநீா் ஏற்பாடு தற்காலிக சுகாதார வளாகம், மேடை அமைத்தல், மைதானம் தூய்மை செய்தல் ஆகியவற்றை நகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும். அதேபோல் விளையாட்டு போட்டி நடைபெறும் மேற்குறிப்பிட்ட நாள்களில் அனைத்து இடங்களிலும் சுகாதாரக் குழுவுடன் ஆம்புலன்ஸ் எற்பாடு செய்ய வேண்டும்.
அதற்கு முன்னதாக பல்வேறு போட்டிகள் நடத்தும் வகையில் மைதானத்தை மேம்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 22.8.2025 அன்று நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும் வீரா், வீராங்கனைகளுக்கு சிறப்பு ஆசிரியா் ஒருவரை உதவியாளராக நியமனம் செய்ய வேண்டும்.
மேலும், முதல்வா் கோப்பை போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து உறுப்பினா்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலா் சேதுராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) யுவராஜ், பயிற்சியாளா்கள் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.