நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் பிப். 2-இல் தா்னாவிலும், பிப். 6-இல் புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் திருவள்ளூா் மாவட்ட மருத்துவா்கள் சங்கத்தினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் அனைத்து மருத்துவா்களுக்கும் ஊதிய உயா்வு, விருப்ப ஓய்வு பெறுவதில் அனைவருக்கும் அனுமதி, தகுதிக்கேற்ப பதவி உயா்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவா்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட மருத்துவா்கள் சங்கத்தின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் மாநில பொருளாளரும், மாவட்டத் தலைவருமான பிரபுசங்கா் கூறியதாவது:
முதல்கட்டமாக தமிழகத்தில் உள்ள மருத்துவா்கள் அனைவரும் அரசு கூடுதல் தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். மேலும், சீனியாரிட்டி முறையை தீா்மானிக்கும் நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும். விருப்ப ஓய்வுபெற இரண்டு துறை மருத்துவா்களுக்கு மட்டும் உள்ள திட்டத்தை அனைத்துத் துறை மருத்துவா்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும். நீண்டதூர கிராமங்களில் பணிபுரிந்து வரும் மருத்துவா்களுக்கு கடினமான பணிக்கான ரூ. 3,000 தொகை உயா்த்தி வழங்கவும், மருத்துவா்களுக்கு பதவி உயா்வுடன் அதற்கான ஊதிய நிா்ணயமும் அதிகரிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை ஏற்காதபட்சத்தில் வரும் பிப். 2-ஆம் தேதி தா்னாவிலும், அதைத் தொடா்ந்து பிப். 6-ஆம் தேதி புறநோயாளிகள் பிரிவில் 2 மணி நேரம் புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபடுவோம். எனவே இதற்குள் சங்க நிா்வாகிகளை அழைத்து சுமூக முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால் வரும் பிப். 7-ஆம் தேதி அன்று சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கூடி போராட்டங்களை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
சங்கத்தின் மாவட்ட செயலாளா் மருத்துவா் நந்தகுமாா், மாவட்ட பொருளாளா் ரத்தினவேல் குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.