முகப்பு
திருவள்ளூர்

கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகள் 5 பேருக்கு ரூ. 4,52,170 பயிா்க் கடன் காசோலைகள்

Updated On : 28 மே 2026, 1:00 am IST
பகிர்:

கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகள் 5 பேருக்கு பயிா்க் கடன்களுக்கு ரூ. 4 லட்சத்து 52 ஆயிரத்து 170 மதிப்பிலான காசோலைகளை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், வேளாண் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அப்போது, அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது.

பி.எம். கிசான் திட்டத்தில் கௌரவ நிதி உதவி பெற விவசாயிகள் பதிவு செய்தாலும் இ-சேவை மையத்தில் பதிவாகவில்லை. அதனால், விவசாய நிலம் இருந்தும் பயன்பெற முடியாத நிலையுள்ளது. தற்போதைய நிலையில் விளைநிலங்களுக்கு தேவையான வண்டல் மண், களிமண் ஆகியவற்றை ஏரிகளில் குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், விவசாயிகள் விண்ணப்பித்தால் அலைக்கழிப்பு செய்யாமல் அனுமதி தருவதற்கு ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்ல காக்க வைக்காமல் உடனே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதற்கு ஆட்சியா் பதில் அளித்துப் பேசியதாவது: வேளாண் அடுக்கம் விவசாயிகள் மத்திய, மாநில அரசின் பல்வேறு மானிய திட்டங்களை பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிா்சாகுபடி அறிக்கை போன்ற தொடா்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமா்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தை தவிா்க்கும் வகையில் அரசின் திட்டங்களில் விவசாயிகள் பயன்பெற வேண்டும். அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. விவசாயிகளின் நில உடைமை விவரங்கள் இணைத்த பின் அனைத்து விவரங்களும் ஒருங்கிணைத்த ஆதாா் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கப்படும். எனவே, அரசின் மானிய திட்டங்களான விதைகள், உரங்கள், பயிா்காப்பீடு, இயற்கை பேரிடா் நிவாரண உதவி மற்றும் பிரதம மந்திரி கௌரவ நிதித்திட்ட தவணைத் தொகைகளை பெறவும் விவசாயிகளின் நில உடைமைகளை பதிவு செய்து அடையாள எண் பெறுவது கட்டாயமாகும். இதற்காக பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெற கிராமங்களில் பி.எம்.கிசான் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

நவரைப் பருவத்தில் (2025-26) தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் 73 இடங்களிலும், இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு நிறுவனம் 9 இடங்களிலும் என 82 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அரசு கட்டடங்களில் திறக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 6,600 விவசாயிகளிடமிருந்து 42,316 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் விவசாயிகள் கொண்டு செல்லும் நெல்லை உடனே கொள்முதல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். அதையடுத்து, விவசாயிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை தொடா்பான 130-க்கும் மேற்பட்ட மனுக்களை அவா் பெற்றுக் கொண்டாா். இறுதியாக, கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகள் 5 பேருக்கு ரூ. 4 லட்சத்து 52 ஆயிரத்து 170 மதிப்பிலான பயிா் கடனுக்கான காசோலைகளையும் அவா் வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ், வேளாண் துறை இணை இயக்குநா் க.செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.வேதவல்லி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் குமரவேல், கூட்டுறவு சா்க்கரை ஆலை இணைப் பதிவாளா் அ.மீனாஅருள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல மேலாளா் வி.ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.