முகப்பு
வணிகம்

நூல் விலை உயர்வு: சிக்கலில் பின்னலாடைத் துறை

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சீராக சென்று கொண்டிருந்த பின்னலாடை உற்பத்தி துறை தற்போது நூல் விலை உயர்வு காரணமாக சிக்கலை சந்தித்துள்ளது.

வணிகம்

நூல் விலை உயர்வு: சிக்கலில் பின்னலாடைத் துறை

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சீராக சென்று கொண்டிருந்த பின்னலாடை உற்பத்தி துறை தற்போது நூல் விலை உயர்வு காரணமாக சிக்கலை சந்தித்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:28 AM
பகிர்:

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சீராக சென்று கொண்டிருந்த பின்னலாடை உற்பத்தி துறை தற்போது நூல் விலை உயர்வு காரணமாக சிக்கலை சந்தித்துள்ளது.

நூல் விலை உயர்வால் ஏற்கெனவே பெறப்பட்ட வெளிநாட்டு வத்தக ஒப்பந்தங்களை செய்து முடிக்க முடியாமலும், புதிய வர்த்தக ஒப்பந்தங்களைப் பெற இயலாமலும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர்.

இந்தியாவின் பின்னலாடை உற்பத்திக் கேந்திரமாக திருப்பூர் மாநகரம் விளங்குகிறது.

இங்கு, ஜாப் ஆர்டர்களை கையாளும் நிறுவனங்கள் முதல், பெரிய நிறுவனங்கள் வரை சுமார் 10,000 பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலமாக நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 3 லட்சம் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

நாட்டின் அன்னியச் செலாவணியில் முக்கிய பங்கு வகிக்கும் பின்னலாடைத் தொழில், கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு பிரச்னைகளால் ஏற்பட்ட சரிவிலிருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு இறுதியில் மீளத் தொடங்கியது. 2015-ஆம் ஆண்டு பின்னலாடைத் தொழில் 15 சதவீத வளர்ச்சி பெற்றதாக தொழில் துறையினர் தெரிவித்தனர். இதே வளர்ச்சி 2016-ஆம் ஆண்டு தொடக்கத்திலும் நீடித்தது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக சீராகச் சென்று கொண்டிருந்த இந்திய பின்னலாடைத் தொழில் தற்போது நூல் விலை உயர்வு என்ற சிக்கலில் சிக்கியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக உயர்ந்து வரும் நூல் விலை, பின்னலாடை உற்பத்தியாளர்களை கவலை கொள்ளச் செய்துள்ளது. நூல் விலை உயர்வு காரணமாக ஏற்கெனவே ஒப்பந்தம் போடப்பட்ட பின்னலாடை உற்பத்தி ஆர்டர்களை குறிப்பிட்ட உற்பத்தி செலவுக்குள் செய்து முடிக்க முடியாமலும், புதிய ஆர்டர்களை பெற முடியாமலும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர். இதனால் நாட்டின் மொத்த பின்னலாடை உற்பத்தியில் தொய்வு ஏற்படவும் தொழிலாளர்கள் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

பின்னலாடை உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் 20-ஆம் எண் நூல் தொடங்கி 40-ஆம் எண் நூல் வரை தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.190 முதல் ரூ.260 வரை விற்பனை செய்யப்படுவதாகவும், கடந்த மூன்று மாதங்களில் கிலோவுக்கு நூல் விலை ரூ.22 வரை அதிகரித்துள்ளதாக கூறுகிறார் திருப்பூர் ஹொசைரி நூல் வியாபாரிகள் சங்க செயலாளர் ஏ.டி.அருணாசலம்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியது: கடந்த மே மாதம் முதல் நூல் விலை உயர்ந்து வருகிறது. மே மாதம் கிலோவுக்கு ரூ.7, ஜூன் மாதம் கிலோவுக்கு ரூ.5, ஜூலையில் ரூ.10 என்கிற அளவில் விலை அதிகரித்தது. இதற்கு பஞ்சு விலை 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி விலை ரூ.28,000-லிருந்து ரூ.45,000 வரை உயர்ந்ததே காரணம்.

ஒரு கிலோ நூலுக்கு ரூ.25 வரை உயர்த்தினால் மட்டுமே தங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய முடியும் என்று நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவிப்பதால், அடுத்து வரும் மாதங்களில் விலை மேலும் உயரவே வாய்ப்புள்ளது. பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்துவன் மூலம்தான் நூல் விலை உயர்வை தடுக்க முடியும் என்றார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பி.முத்துரத்தினம் இது குறித்துக் கூறியது: நூல் விலை உயர்வால் ஏற்கெனவே எடுத்த ஆர்டர்களை முடிக்க முடியாமல் உள்ளோம். இதனால் கிடைக்கும் 10 சதவீத லாபத்தில் இழப்பு ஏற்படும் நிலையில், மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் புதிய ஆர்டர்களை எடுக்கத் தயங்கி வருகிறோம். இதனால் நமது நாட்டுக்கு வர வேண்டிய ஆர்டர்கள் அண்டை நாடுகளுக்கு செல்கின்றன. கடந்த மூன்று மாதங்களில் 40 முதல் 50 சதவீத ஆர்டர்கள் இந்த காரணத்துக்காக அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளன. இது மொத்த உற்பத்தி வளர்ச்சியை பாதிக்கும் விஷயமாக உருவெடுத்துள்ளது. நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த செயற்கையாக உருவாக்கப்படும் பஞ்சு தட்டுப்பாடு பிரச்னையை தீர்க்க வேண்டும். பதுக்கி வைக்கப்படும் பஞ்சுகளை தனியாரிடமிருந்து பறிமுதல் செய்து, இந்திய பருத்திக் கழகம் மூலமாக விற்பனை செய்ய வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வரை சந்திக்கவுள்ளோம் என்றார்.

இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) மாநிலக் குழு உறுப்பினரும், பின்னலாடை உற்பத்தியாளருமான ராஜா எம்.சண்முகம் கூறுகையில், சர்வதேச சந்தையைவிட இந்தியாவில் பஞ்சு விலை அதிகமாக உள்ளது. செயற்கையாக உருவாக்கப்படும் தட்டுப்பாடுதான் இதற்கு காரணம். இதனால் விவசாயிகள் யாரும் பயனடைவதில்லை என்றார்.

மேலும், இதுபோன்ற நேரங்களில் செயல்பட வேண்டிய இந்திய பருத்திக் கழகமும் சந்தை விலைக்கே பஞ்சு விற்பனை செய்கிறது.

மாறாக, இந்திய பருத்திக் கழகம் பஞ்சு கொள்முதல் செய்து சிறிய லாபத்தில் நூற்பாலைகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற கருத்தும் தொழில் துறையினர் சார்பில் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், செயற்கைத் தட்டுப்பாட்டை தடுக்க விரைவில் நடைபெறவுள்ள மத்திய அரசின் பருத்தி ஆலோசனை வாரிய கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →