இணையம் பிணைக்கும் உலகம்
இணையம் என்றவுடன் கணினியும் திரையில் தெரியும் மின் தகவல்களும் உங்கள் மனக்கண் முன் வருகிறதா?
இணையம் என்றவுடன் கணினியும் திரையில் தெரியும் மின் தகவல்களும் உங்கள் மனக்கண் முன் வருகிறதா?
அப்படியானால் நீங்கள் இன்னும் இருபது ஆண்டுகள் பின்னால் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்!
இன்று இணையம்-இணையதளம் என்றால், வெறும் கணினியுடன் நின்றுவிடுகிற விஷயமில்லை. இப்போது எங்கும் இணையம், எதிலும் இணையம் என்கிற காலத்தை அடைந்துவிட்டோம். போகப் போக இது மேலும் பரவும்.
மிக எளிமையான உதாரணம், உங்கள் செல்லிடப்பேசி மூலம் தொலைக்காட்சி, ஏ.சி.யைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் வந்துவிட்டது. வீட்டுக்கு வெளியே இருக்கும்போது அல்லது வெளியூரில் இருக்கும்போது, சில வீட்டு சாதனங்களின் செயல்பாடு குறித்து உங்கள் செல்லிடப்பேசி மூலமாக அறிந்து கொள்ள முடியும்.
வீட்டு சாதனமும், உங்கள் கையிலுள்ள செல்லிடப்பேசி என்னும் சாதனமும் எப்போதும் தொடர்பில் உள்ளதால் இது சாத்தியமாகிறது. "கிளவுட்' அடிப்படையிலான தொழில்நுட்பம் மூலம் அவை உரையாடிக் கொண்டிருக்கின்றன. இதுபோல வீட்டுப் பொருள்கள் மட்டுமல்லாமல், பொது இடங்களில் உள்ள சாதனங்களில் பொருத்தியிருக்கும் மின்னணுத் தகவல் சேகரிக்கும் நுண்ணுணர்வு சென்சர்கள் மூலம் தகவல்களை எப்போதும் திரட்டிக் கொண்டே இருப்பதும், அந்தத் தகவல்களை வேண்டிய வகையில் பயன்படுத்திக் கொள்வதும் இப்போதே சாத்தியமாகிவிட்டது.
இயந்திரங்களுக்கு இடையேயான அல்லது சாதனங்களுக்கு இடையேயான தொடர்பு (மெஷின் டு மெஷின் அல்லது எம்-டு-எம்) என்று இதனைக் கூறுகின்றனர். இதன் மற்றொரு பெயர் "இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்' அல்லது "சாதனங்கள் இடையேயான இணையம்'.
மனிதர்களுக்கிடையே, மனிதர்களுக்கும் சாதனங்களுக்கும் இடையே, பல்வேறு சாதனங்களுக்கு இடையேயான மாபெரும் இணைப்பை "இண்டர்நெட் ஆஃப் திங்ஸ்' என்கிறார்கள்.
உதாரணமாக, உங்கள் வீட்டு குளிர்பதனப் பெட்டியில் பால் பாக்கெட்டுகள் இல்லையென்றால், அங்கு பொருத்தப்பட்டுள்ள நுண்ணுணர்வு சென்சர் மூலம் உங்கள் செல்லிடப்பேசிக்கு அது பற்றித் தகவல் கிடைக்கச் செய்யலாம்.
நமது உடல் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து, அந்தத் தகவல்களை நமது மருத்துவரின் கணினியின் தகவல் சேமிப்பகத்தில் சேர்க்கலாம். அவர் அதைப் பார்த்து அதற்குத் தகுந்த மருத்துவப் பரிந்துரையை அளிக்க முடியும்.
செல்லிடப்பேசியில் "புளூடூத்' பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நூறு மீட்டர் இடைவெளியில் உள்ள இரு செல்லிடப்பேசிகளிடையே வயர் இல்லாத தொடர்பு மூலம் பல விதமான "ஃபைல்களைப்' பரிமாறிக் கொள்ள முடிகிறது அல்லவா?
இதையே அதிக தூரத்தில் உள்ள, செல்லிடப்பேசி அல்லது பல மின்னணு சாதனங்களிடையே செயல்படுத்தினால் எப்படியிருக்கும்!
உங்கள் வாஷிங் மெஷின், ஏ.சி., மிக்ஸி, கிரைண்டரைக் கூட தொலைவிலிருந்து கண்காணித்து, செல்லிடப்பேசி மூலம் கட்டுப்படுத்த இயலும் நிலை வந்து கொண்டிருக்கிறது.
இணையதள வசதி உள்ள இன்றைய ஸ்மார்ட்போன் தொலைபேசியை முழுமையான கணினியாகப் பயன்படுத்த முடிகிறது.
கருப்பையில் உள்ள சிசுவின் இதயத்துடிப்பு உள்ளிட்ட ஒவ்வொரு அசைவையும் அறிய உதவும் நூதனமான "பெல்ட்' இஸ்ரேல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கருவுற்ற பெண்கள் இந்த பெல்ட்டை அணிந்து கொண்டு, சிசுவின் இதயத் துடிப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கண்காணிக்கலாம்.
இந்த பெல்ட்டில் இ.சி.ஜி. உள்ளிட்ட 13 நுண்ணுணர்வுக் கருவிகள் (சென்சர்) பொருத்தப்பட்டுள்ளன. கருவுற்ற பெண் இதனை தனது இடுப்பில் அணிந்து கொள்ளும்போது, சிசுவின் இதயத் துடிப்பு, அதன் அசைவுகள் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு, அந்த தகவல்கள் கணினியில் சேமிக்கலாம்.
இந்தத் தகவல்கள் கணினியில் உடனுக்குடன் ஆய்வு செய்யப்பட்டு, இறுதித் தகவல்களைத் தனது ஸ்மார்ட்போன் வழியாக அந்தப் பெண் பெற இயலும்.
இந்த நூதன பெல்ட் மூலம், சிக்கலான பிரசவப் பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் பெற இயலும்.
கர்ப்பிணிகள் மருத்துவமனை அல்லது பரிசோதனை நிலையத்துக்கு நேரில் சென்று ஆலோசனைகள் பெறுவது தவிர்க்கப்படும்.
சிசுவின் விவரங்களை மருத்துவர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்தே கண்காணித்து, கர்ப்பிணிகளுக்கான ஆலோசனைகளை வழங்க முடியும்.
தொலைத் தொடர்பு தொழில்நுட்பம், மின்னணுத் தொழில்நுட்பம், மென்பொருள் உருவாக்கம், இவையெல்லாம்தான் இது போன்ற சாதனங்களை சாத்தியமாக்கியுள்ளது.
இணையத்தால் பிணைக்கப்பட்ட உலகம் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.
உலகில் இணையத்தால் பிணைக்கப்பட்ட மொத்த சாதனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 23 சதவீத அளவில் அதிகரித்து வருகிறது. அவற்றின் எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் 2,800 கோடியாக இருக்கும் என்கிறது ஓர் ஆய்வு. இதில் செல்லிடப்பேசி அல்லாத சாதனங்களின் எண்ணிக்கை 1,600 கோடியாக இருக்குமாம்.
இணையப் பிணைப்பு பெற்ற சாதனங்களின் எண்ணிக்கை அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகில் உள்ள மொத்த ஸ்மார்ட்போன் எண்ணிக்கையைக் கடந்துவிடும்.
இணையதளப் பயன்பாடு அதிகரித்து வருவதைப் போலவே, இணையத் தொழில்நுட்பமும் வளர்ந்து வருகிறது. புதிய புதிய வழிகளில் இணையத் தொழில்நுட்பத்தைப் புகுத்திய சாதனங்கள் பெருகி வருகின்றன.
தங்கள் செல்லிடப்பேசிகளில் இணைய வசதி இருந்தும், உலகில் சுமார் 18 சதவீதத்தினர் அதனைப் பயன்படுத்துவதில்லை.
இந்தியாவில் நவீன ரக ஸ்மார்ட்போன்களை வைத்திருப்பவர்களில் 48 சதவீதத்தினர்தான் இணைய வசதியைப் பயன்படுத்துகின்றனர். 52 சதவீதத்தினர் இணைய வசதியைப் பெறவே இல்லை. உரையாடுவதைத் தவிர, இசை கேட்பது போன்றவற்றுக்கு மட்டுமே அதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் உலக நாடுகளை ஒப்பிடும்போது, இணைய வசதிக்கு மாறும் வாடிக்கையாளர் எண்ணிக்கை இந்தியாவில்தான் வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. ஆனால் இணையத்தால் பிணைக்கப்பட்ட எதிர்கால உலகில் நாம் அவ்வளவு சுலபமாக ஒதுங்கி இருந்துவிட முடியாது.
செல்லிடப்பேசி என்பது உரையாடலுக்கும் பிற தகவல் பரிமாற்றத்துக்கும் என்றில்லாமல், பல்வேறு புதிய வழிகளிலும் பயன்படும் சாதனமாக மாறிக் கொண்டு வருகிறது.
4ஜி தொலைத் தொடர்பு தொழில்நுட்பம், பெரிய அளவிலான தகவல்களை வேகமாகப் பரிமாறிக் கொள்ள வழி செய்கிறது.
பெரிய அளவிலான தகவலின் - தரவுகளின் பரிமாற்றம் - என்கின்றபோது, விரைவான விடியோ பரிமாற்றத்தை இந்தத் தொழில்நுட்பம் உறுதி செய்கிறது. விடியோ பரிமாற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், அடுத்த கட்ட தொழில்நுட்ப பாய்ச்சலாக 5ஜி தொழில்நுட்பம் நடைமுறைக்கு வருவது பற்றிய பேச்சு தொடங்கிவிட்டது.
-டி.எஸ்.ஆர்.