மும்பை நகரத்துக்குப் பிறகு இந்தியாவின் சுறுசுறுப்பான தொழில் நகரமாக அறியப்படுவது பெங்களூரு. தகவல் மற்றும் உயிரித் தொழில்நுட்பம், விண்வெளி, விமானம், மின்னணு, நானோ தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், பிளாஸ்டிக், கார்மென்ட்ஸ் போன்ற பல தொழில்களின் குவிமையமாக பெங்களூரு விளங்கி வருகிறது.
தொழில் உற்பத்திப் பொருள்கள் இந்தியாவின் பல நகரங்களுக்குக் கொண்டு செல்வதில் லாரி போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள், கர்நாடகத்தைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது.
எவ்வித தங்கு தடையும் இல்லாமல் இயங்கிவந்த லாரி போக்குவரத்து, காவிரிப் பிரச்னையால் தடைபட்டுள்ளது. 1991-ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியபோது, கர்நாடகத்தில் தமிழர்கள் மீது வன்முறை ஏவிவிடப்பட்டது. அப்போது, தமிழகம்-கர்நாடகம் இடையிலான வழித்தடங்கள் முழுமையாக மூடப்பட்டன.
அப்போதும் லாரி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதேபோன்றதொரு நிலை மீண்டும் உருவெடுத்துள்ளது.
காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் செப்.5-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் கன்னட அமைப்பினர், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகத்தை கடந்து சென்ற தமிழகப் பதிவெண் கொண்ட லாரிகள் மீது கல்லெறிந்து சேதப்படுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக செப். 12-ஆம் தேதி பெங்களூரு, மண்டியா, பெல்லாரி, ராமநகரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த கலவரத்தில் 60 லாரிகளை கலவரக்காரர்கள் தீக்கிரையாக்கினர்.
கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் 200-க்கும் அதிகமான லாரிகள் கல்வீசி சேதப்படுத்தப்பட்டன. மேலும், லாரி ஓட்டுநர்கள் தாக்கப்பட்டனர். காவிரிப் பிரச்னையால் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், கர்நாடகம்-தமிழகம் இடையிலான வழித்தடங்கள் அனைத்தும் கிட்டதட்ட ஒரு மாதமாக அடைக்கப்பட்டுள்ளன.
கர்நாடகத்தை கடந்து வட இந்தியாவுக்கும், வட இந்தியாவில் இருந்து தமிழகத்துக்கும், தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கும், கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கும் செல்ல வேண்டிய லாரிகள் இருமாநில எல்லைகளில் முழுமையாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் முடங்கியுள்ளது. காவிரி கலவரத்தில் சிக்கி லாரி தொழில் சிதைந்து வருவது லாரி உரிமையாளர்கள், தொழிலாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதே நிலை நீடித்தால், லாரி தொழிலின் எதிர்காலம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று வேதனை தெரிவிக்கிறார் கர்நாடக லாரி உரிமையாளர் மற்றும் முகவர்கள் கூட்டமைப்புத் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், காவிரி சிக்கலில் தமிழகம்-கர்நாடக மாநில அரசுகள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. கலவரத்தின்போது லாரிகளை குறிவைத்து தாக்குவதை சிலர் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். லாரிகள், பொருளாதாரத்தின் தூதுவர்கள் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கர்நாடகம்-தமிழகம் இடையிலான எல்லைகள் இந்தியா-பாகிஸ்தான் எல்லையைப் போல பதற்றமானதாக மாறியுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், லாரி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தினமும் தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு 3 ஆயிரம் லாரிகள் செல்கின்றன. சிவகாசி, தூத்துக்குடி, ஈரோடு, நாமக்கல், ஓசூர், கோவை, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பட்டாசு, கோழி, முட்டை, பின்னலாடை, தானியங்கள் உள்ளிட்ட பல பொருள்கள் வட இந்தியாவுக்கு லாரி மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.
இதேபோல, கர்நாடகத்தில் இருந்து காய்கறி, கோழித் தீவனம், பருப்பு, தானியங்கள் உள்ளிட்ட பல பொருள்களைச் சுமந்துகொண்டு தினமும் 1,500 லாரிகள் தமிழகம் செல்கின்றன. குஜராத், கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து கர்நாடகம் வழியாக தினமும் 5 ஆயிரம் லாரிகள் செல்கின்றன.
கர்நாடகம், தமிழகம் போன்ற மாநிலங்களின் பதிவெண் கொண்டிருந்தாலும், இவை அனைத்தும் தேசிய உரிமம் பெற்ற லாரிகள். கடந்த ஒரு மாதமாக கர்நாடகம்-தமிழகம் எல்லைகளைக் கடந்து லாரிகள் பயணிக்க முடியவில்லை. இது இந்திய பொருளாதாரத்தை வெகுவாகப் பாதித்து வருவதை சம்பந்தப்பட்டவர்கள் யாரும் உணரவில்லை. இரு மாநில எல்லையில் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், தினமும் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.400 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுவருகிறது.
செப்.5-ஆம் தேதியில் இருந்து சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், ரூ.60 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு சரக்குகள் தேங்கியுள்ளன. ரூ.1000 கோடி அளவுக்கு ரசாயனப் பொருள்கள் தேங்கியுள்ளன. சரக்கு, லாரி வாடகை, தொழிலாளர் ஊதியம் ஆகியவற்றை கணக்கிட்டால் சுமார் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது பொருளாதாரப் பேரிழப்பாகும். லாரி போக்குவரத்து முடங்கியுள்ளதால் கர்நாடகத்துக்கு ரூ.200 கோடி, தமிழகத்துக்கு ரூ.250 கோடி வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. லாரி தொழில் மூலம் அரசுகளுக்கு கிடைக்க வேண்டிய ஒட்டுமொத்த வரி வருவாய் இழப்பு ரூ.45 ஆயிரம் கோடி ஆகும்.
15 ஆயிரம் லாரிகள் மூலம் நிதி நிறுவனங்களுக்கு ரூ.7,500 கோடி தவணைத் தொகை செலுத்த இயலாத நிலை உருவாகியுள்ளது.
இந்த இழப்புகளுக்கு எல்லாம் யார் பொறுப்பு? இனிமேலும் பொருளாதார இழப்புகளைத் தாங்கிக் கொள்ள இயலாது என்பதால் கர்நாடகம்-தமிழகம் இடையிலான வாகன போக்குவரத்தை உடனடியாக அனுமதிக்க வேண்டும்.
லாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். கர்நாடகத்தில் தீயிட்டு எரிக்கப்பட்ட 50 லாரிகள், கல்வீசித் தாக்கப்பட்ட 200-க்கும்மேற்பட்ட லாரிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
கர்நாடக-தமிழக அரசுகள் லாரிகளுக்கு சாலை வரியையும், மத்திய அரசு சுங்க வரியையும் ரத்து செய்ய வேண்டும். சரக்கு ஏற்ற முடியாமல் 20 ஆயிரம் லாரிகள் தவித்து வரும் நிலையில், 4 ஆயிரம் லாரிகள் சரக்குகளுடன் முடங்கியுள்ளன.
லாரி தொழில் முடக்கத்தால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகத்தில் பாதுகாப்பில்லாமல் தவித்துவரும் தமிழகப் பதிவெண் கொண்ட 15 ஆயிரம் லாரிகளை தமிழகம் அனுப்பி வைக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கர்நாடகம்-தமிழகம் இடையே நிலவும் பதற்ற நிலை நீங்கி, மாநில எல்லைகளைக் கடந்து லாரிகள் பயணம் செய்ய வேண்டும் என்பதே லாரி தொழிலில் ஈடுபட்டிருக்கும் உரிமையாளர்கள், தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.