முகப்பு
வணிகம்

இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங்கை நெருங்கும் ஜியோமி!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தில் உள்ள சாம்சங்கை-ஜியோமி நெருங்கிவிட்டதாக கவுன்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:33 AM
பகிர்:

இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தில் உள்ள சாம்சங்கை-ஜியோமி நெருங்கிவிட்டதாக கவுன்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இணை இயக்குநர் தருண் பாடக் கூறியுள்ளதாவது: 
செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையில் தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் பங்களிப்பு 22.8 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனத்தின் பங்களிப்பு 22.3 சதவீத அளவை எட்டியுள்ளது. 
இதையடுத்து அந்த காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் மற்றும் ஜியோமி நிறுவனங்களுக்கிடையிலான வித்தியாசம் அரை சதவீதம் மட்டுமே. 
எனவே, சாம்சங் நிறுவனத்துக்கு கடும் போட்டியாக ஜியோமி உருவெடுத்துள்ளது. 
அந்தக் காலாண்டில் சீனாவை சேர்ந்த மற்ற நிறுவனங்களான விவோ 9.5 சதவீத சந்தைப் பங்களிப்புடன் மூன்றாவது இடத்தையும், ஓப்போ 8.5 சதவீத சந்தைப் பங்களிப்புடன் 5-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இரண்டு நிறுவனங்களின் விற்பனை கடந்த ஆண்டில் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்த நிலையில், சாம்சங் நிறுவனம் சந்தைப் பங்களிப்பை இழந்துள்ளது. அதிக தரம்-தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருவதையடுத்து சீன பிராண்டுகளுக்கு இந்தியாவில் மவுசு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜியோமியின் சந்தை பங்களிப்பு 6.4 சதவீதமாகவும், சாம்சங் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 22.6 சதவீதமாகவும் இருந்தது. ஓராண்டு காலத்தில் சீன நிறுவனமான ஜியோமியின் விற்பனை நான்கு மடங்காக அபார வளர்ச்சி கண்டுள்ளது. 
நடப்பு ஆண்டு ஜனவரியிலிருந்து மார்ச் வரையிலான கால அளவில் சாம்சங் நிறுவனம் 26 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தையும், ஜியோமி 13 சதவீத சந்தை பங்களிப்புடன் இரண்டாம் இடத்தையும் பிடித்திருந்தன. 
நோக்கியா பிராண்டை ஹெச்எம்டி குளோபல் சொந்தமாக்கிய பிறகு, கடந்த காலாண்டில் ஃபீச்சர் போன்களை வெளியிட்டது. இதற்கும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, செப்டம்பர் காலாண்டில் 8 சதவீத சந்தை பங்களிப்பைக் கொண்டு நோக்கியா நிறுவனம் செல்லிடப்பேசி விற்பனையில் 4-ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 
கடந்த ஜனவரியிலிருந்து இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடலாக அந்த நிறுவனத்தின் "ரெட்மி நோட் 4' உள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும் ஜியோமி நிறுவனம் இந்தியாவிலிருந்து ரூ.6,500 கோடியை வருவாயாகப் பெற்றுள்ளது. இந்தியாவில் நுழைந்த மூன்று ஆண்டுகளில் இந்த சாதனையை அந்த நிறுவனம் நிகழ்த்தியுள்ளது என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →