முகப்பு
வணிகம்

நுகர்வோரை உறிஞ்சும் "அட்டைகள்'!

இப்போதெல்லாம், கிரெடிட் கார்டு என்பது கெளரவக் குறியீடாக மாறிவிட்டது. முன்பெல்லாம் கடன்காரன் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளாத சமூகம், இன்று அதே சொல்லை ஆங்கிலத்தில் கிரெடிட் கார்டு என்று மொழி பெயர்த்து

Updated On : 22 ஜூலை, 2025 at 9:36 AM
பகிர்:

இப்போதெல்லாம், கிரெடிட் கார்டு என்பது கெளரவக் குறியீடாக மாறிவிட்டது. முன்பெல்லாம் கடன்காரன் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளாத சமூகம், இன்று அதே சொல்லை ஆங்கிலத்தில் கிரெடிட் கார்டு என்று மொழி பெயர்த்து சந்தோஷம் கொள்கிறது. தேவையற்ற கடன்களைப் பெறுவது என்பது இன்றைய காலத்தில் மிகவும் அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம்.

முன்பெல்லாம், அரசுப் பணியில் இருப்பவர்கள் மாதம் தொடங்கி ஊதியம் பெற்றவுடன் அந்த மாதத்துக்குத் தேவையான குடும்ப பட்ஜெட்டை தயார் செய்து மளிகை சாமான், குழந்தைக்குத் தேவையான பொருள்கள் முதல், மருந்துகள் வரை அவசியத் தேவைகள் குறித்த பட்டியலை எழுதி, தேவையான பொருள்களை மட்டுமே பக்கத்தில் உள்ள கடைகளில் வாங்கிச் செல்வர். அன்று நமக்குத் தேவைப்படும் பொருள்கள் அல்லது நாம் விரும்பும் பொருள்கள் மட்டுமே வாங்கப்பட்டன. ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பற்பசை காலியாகிவிட்டது, அதை வாங்கி வருவோம் என்றவுடன், நாங்களும் வருவோம் என குடும்பமே குதூகலமாக சூப்பர் மார்க்கெட்டுக்கு படை எடுக்கிறது. கடைக்குள் சென்றவுடன் அணிவகுத்து நிற்கும் தள்ளுவண்டியை தள்ளி வரும் மகன், மகள் உள்ளிட்டோர் வரிசையாகப் பார்வையில் படும் பொருள்களை எடுத்து தள்ளுவண்டிகளை நிரப்பிய வண்ணம் இருப்பார்கள். போதாக்குறைக்கு மனைவியும் அது தேவை , இது தேவை என பல பொருள்களை அள்ளி நிரப்புவார். கடைசியில் ரசீதை பார்த்தால் சில ஆயிரங்களை தொட்டிருக்கும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என்கிற கடன்-பற்று அட்டைகள் வந்த பின்பு கரன்சிகளை எண்ணும் பழக்கம் போய்விட்டது. அட்டையைக் கடை சிப்பந்தியிடம் அளித்தால், அதனைத் தேய்த்து வரவு வைத்துக் கொள்வார். பரிவர்த்தனை அத்தனை சுலபமாகிவிட்டது, இந்த அட்டைகளால்.

எல்லா பொருள்களையும் அள்ளி எடுத்துக் கொண்டு வீடு வந்து பார்த்தால், எதை வாங்கச் சென்றோமோ, அதாவது அத்தியாவசிய பற்பசையை வாங்காமல் வந்தது தெரியவரும். அதை பக்கத்திலுள்ள கடைக்குச் சென்று வாங்கி வருவோம். இது நுகர்வோர் மீது திணிக்கப்படும் வியாபார தந்திரத்தின் ஒரு பக்கம். இந்த தந்திரத்தில் கிரெடிட் கார்டுகளுக்கு பெரும் பங்குண்டு.

படித்து முடித்து வேலைக்குச் சென்று கையில் ஓரளவு காசு வந்தவுடன், எப்படித்தான் கிரெடிட்கார்டு வழங்கும் நிறுவனங்களுக்கு தெரிகிறதோ புரியவில்லை. அவர்களின் செல்லிடப்பேசியில் தொடர்ந்து பேசி அவர்களின் தலையில் கிரெடிட் கார்டை கட்டி விட்டு நகர்ந்து விடுகின்றனர். இப்படி வாடிக்கையாளர்களை பிடிப்பதற்கென்றே பிரத்தியேகமான பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வேலையே எப்படியாவது கிரெடிட் கார்டை விற்பனை செய்வதுதான்.

முன்பெல்லாம் கையில் பணமில்லை என்றால் சாலையோரக் கடையில் கூட டீ குடிக்க தயங்குபவர்கள் பலர் உண்டு. ஆனால், இப்போதோ கையில் நயா பைசா இல்லை என்றாலும், கவலையில்லை- வண்ண விளக்குகள் ஒளிரும் உணவகங்களுக்கு உள்ளே தயங்காமல் சென்று உணவு சாப்பிடும் நிலை உருவாகியுள்ளது. இதற்கெல்லாம் தைரியம் தருவது பையில் இருக்கும் கிரெடிட் கார்டு.

இந்த கிரெடிட் கார்டு வருகையால் நுகர்வோரின் "வாங்கும் சக்தி' அதிகரித்துவிட்டது என்று சொல்லலாம். பெட்ரோல் நிரப்புவதிலிருந்து, விமான டிக்கெட் வாங்வது வரை கிரெடிட் கார்டு போதும். கிரெடிட் கார்டு இல்லாதவர்கள் ஏதோ முந்தைய தலைமுறையை சேர்ந்த விவரம் தெரியாத வனவாசிகள் என்பது போல் சமூகம் நினைக்கும் அளவிற்கு அது மக்களோடு இரண்டறக் கலந்துவிட்டது.

எல்லாம் சரி; கிரெடிட் கார்டை தேவைக்கு பயன்படுத்துவோருக்கு எந்தவித சிரமமும் இல்லை. அதைப் பயன்படுத்துவது தொடர்பான விவரங்கள், வட்டி விகிதங்கள், அபராதங்கள் குறித்து முறையாகத் தெரியாமல் பயன்படுத்துவோர்தான் கையை சுட்டுக் கொள்கிறார்கள்.

தனது வருமானம் இவ்வளவு, இன்னும் 5 நாள்களில் நமக்கு பணம் வந்துவிடும் என்று நிச்சயமாகத் தெரிந்த ஒருவர் கடன் அட்டையைப் பயன்படுத்தி பொருளை வாங்கினால், குறிப்பிட்ட நாளுக்குள் பணத்தை செலுத்தி வட்டியிலிருந்து தப்பிக்கலாம். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை கட்டத் தவறிவிட்டால், எடுத்த பணத்துக்கு அதிக வட்டி விதிக்கப்படும். அதையும் தாண்டி காலம் கடந்தால் அபராதமும் விதிக்கப்படும்.
கிரெடிட் கார்டுதானே, வாங்கிய பணத்தை திரும்பச் செலுத்தாவிட்டால் என்ன? என்றெல்லாம் யோசிக்கக் கூட முடியாது. ஏனென்றால் ஒவ்வொருவரும் பெற்றுள்ள கடன் விவரங்களை அறிந்து கொள்வதற்காக வங்கிகள் உருவாக்கியுள்ள சிபில் என்ற அமைப்பு இதை எல்லாம் உடனே காட்டிக் கொடுத்துவிடும். பிறகு நீங்கள் வேறு எங்கும் கடன் வாங்க முடியாத நிலை ஏற்படும்.
எனவே, நமக்கு இந்த கடன் அட்டை தேவைதானா என யோசித்து வாங்கினால் நன்மை கிடைக்கும். "எதுவுமே கேட்காமல் கிரெடிட் கார்டு கொடுக்கிறார்களே, சும்மா வாங்கி வைப்போமே' என்று லேசாக ஆசைப்பட்டாலும் போதும். அந்த கிரெடிட் கார்டு, விக்கிரமாதித்தன் - வேதாளமாக மாறிவிடும் என்பதுதான் உண்மை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.