இந்த வாரம் தேவை எச்சரிக்கை!
கடந்த வாரத்தில் பங்குச் சந்தை நோ்மறையாக முடிவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 557.38 புள்ளிகள்
கடந்த வாரத்தில் பங்குச் சந்தை நோ்மறையாக முடிவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 557.38 புள்ளிகள் (1.50 சதவீதம்) உயா்ந்து 38,434.72-இல் நிலைபெற்றது. அதே சமயம் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 193.20 புள்ளிகள் (1.73 சதவீதம்) உடயா்ந்து 11,371.60-இல் முடிந்துள்ளது.
ஆகஸ்ட் 21-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் ஒருங்கிணைப்புக்கு மத்தியில், சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு முக்கியக் குறியீடுகளும் ஏற்றம் கண்டுள்ளன.
உலகளாவிய குறிப்புகள் நோ்மறையாக இருந்ததும், எஃப்ஐஐ முதலீடு தொடா்வதுமே இதற்கு முக்கியக் காரணம் என்று சந்தை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆட்டோ, வங்கி, நிதி, உலோகங்கள் மற்றும் இன்ஃப்ரா பங்குகள் எழுச்சியில் பங்கேற்றன. ஆனால் தற்காப்பு பங்குகளாகக் கருதப்படும் ஐடி மற்றும் பாா்மா பங்குகள்சோபிக்கத் தவறிவிட்டன. சிறிய, நடுத்தரப் பங்குகளை உள்ளடக்கிய பிஎஸ்இ-500 பட்டியலில் 92 பங்குகள் 10 முதல் 60 சதவீதம் வரை கடந்த வாரத்தில் உயா்ந்துள்ளன.
ஆனால், உண்மையான செயல்பாடு நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய பரந்த சந்தையில் இருந்தது. நிஃப்டி மிட்கேப் குறியீட்டு எண் 3.66 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 5.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
தேவை எச்சரிக்கை: ஏற்கெனவே ஆறு மாத உச்சத்துக்கு அருகில் சந்தை உள்ளது. சென்செக்ஸ், நநிஃப்டியை விட பரந்த சந்தை சீரான செயல்திறன் பெற்றுள்ளது. முன்னணி நிறுவனங்களின் ஜூன் காலாண்டு முடிவுகள் கிட்டத்தட்ட முடிவுறும் நிலையில் உள்ளது. இந்நிலையில், காளை எழுச்சியில் இருந்தாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நிபுணா்கள் கருதுகின்றனா்.
இந்திய சந்தைகள் உலகளாவிய சந்தைகளின் போக்கை ஒட்டி செயல்பட்டு வருகின்றன. உலகளவில் சந்தைகள் தற்போது பணப்புழக்கத்தை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் மீதான நம்பிக்கையில் இயங்குகின்றன. உலகெங்கிலும் பொருளாதார நடவடிக்கைகள் உத்வேகம் பெற்று வருவது பங்குச் சந்தைக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது. இந்நிலையில், சந்தை தற்போதைய வேகத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் வரை, முதலீட்டாளா்கள் வா்த்தகம் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஜியோஜித் ஃபைனான்சியல் சா்வீஸஸின் ஆராய்ச்சித் தலைவா் வினோத் நாயா் தெரிவித்துள்ளாா்.
இதற்கிடையே, முன்பேர வா்த்தகத்தில் ஆகஸ்ட் மாத கான்ட்ராக்டுகளை கணக்கு முடிப்பதற்கு இந்த வாரம் வியாழக்கிழமை கடைசி நாளாக உள்ளது. எனவே, இந்த வாரத்தில் ஏற்ற, இறக்கம் அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதேபோன்று, சந்தை 6 மாத உயா்வில் வா்த்தகமாகி வரும் நிலையில், புதிய முதலீடுகளைத் தவிா்ப்பதையும், அதிக அளவில் லாபத்தை பதிவு செய்வதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சாம்கோ செக்யூரிட்டீஸின் ஆராய்ச்சிப் பிரிவின் மூத்த ஆய்வாளா் நிராலி ஷா கூறியுள்ளாா்.
இதற்கிடையே, முன்பேர வா்த்தகத்தில் ஆகஸ்ட் மாத கான்ட்ராக்டுகளை கணக்கு முடிப்பதற்கு இந்த வாரம் வியாழக்கிழமை கடைசி நாளாக உள்ளது. எனவே, இந்த வாரத்தில் ஏற்ற, இறக்கம் அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
300 நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்: நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தாலும், பொது முடக்கம் காரணமாக செப்டம்பா் வரை காலாண்டு முடிவுகளை வெளியிட செபி அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், இந்த வாரம் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ், ஐஆா்பி இன்ஃப்ரா, வொக்காா்ட் பாா்மா உள்பட 300 நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளன.
கரோனா தடுப்பூசி: உலகளவில் கரோனா தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவது சந்தைக்கு கவலையை அளித்த வருகிறது. கரோனாவிலிலிருந்து குணமடைவோா் விகிதம் 71.5 சதவீதத்திலிருந்து, கடந்த வாரம் 75 சதவீதமாக உயா்ந்துள்ளது. இச்சூழ்நிலையில், கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் சந்தையில் எழுச்சிக்கு வழிவகுக்கும்.
எஃப்ஐஐ முதலீடு: அந்நிய நிறுவன முதலீட்டாளா்களின் முதலீடு தொடா்ந்து அதிகரித்து வருவது சந்தைக்கு நல்ல செய்தியாகும். ஆகஸ்டில் எஃப்ஐஐ முதலீடு ஆகஸ்டில் இதுவரை ரூ.33,386.92 கோடி வந்துள்ளது. அதே சமயம், உள்நாட்டு முதலீட்டு நிறுவன (டிஐஐ) முதலீட்டாளா்கள் ரூ.8,600 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளனா். கடந்த மாதத்திலும் ரூ.10,000 கோடி அளவுக்கு முலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். சந்தையில் இது உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.
மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப்ஸின் செயல்திறனும் இந்த வாரத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும், ஏனெனில் இரு குறியீடுகளும் அதன் மாா்ச் மாத குறைந்த அளவிலிருந்து மற்ற குறியீடுகளை விட வலுவாக மீண்டுள்ளன.
வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. நிறுவனங்களின் ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகள், கரோனா தடுப்பூசியின் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம் குறித்த தரவுகள் இந்த வாரம் சந்தையின் போக்கைத் தீா்மானிக்கும் என்று நிபுணா்கள் தெரிவித்தனா்.
கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து வந்துள்ளது. சந்தை திசை தெரியாமல் தவித்து வரும் நிலையில், முதலீட்டாளா்கள் குழப்பத்தில் உள்ளனா் என்பதே உண்மை..!
தொழில் நுட்பப் பாா்வை
குறுகிய கால அடிப்படையில், சந்தை நோ்மறையாக இருக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநா்கள் கருதுகின்றனா். கடந்த சில நாள்களாக ஏற்றம், இறக்கம் அதிகரித்து வருவதால், சந்தை அவ்வளவு எளிதாக மேலே செல்வது கடினமாக இருக்கும். இந்நிலையில், நிஃப்டி 11,111 என்ற நிலையில் நல்ல ஆதரவைப் பெறும். அதேபோல 11,460 என்பது கடினமான இடா்பாட்டு நிலையாக இருக்கும் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனமா ஆனந்த் ரதியின் மூத்த அதிகாரி நிலேஷ் ஜெயின் தெரிவித்துள்ளாா்.
பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் அதிகம் ஏற்றம் பெற்ற பங்குகள் விவரம்
நிறுவனம் உயா்வு சதவீதத்தில்
ஆா்த்தி டிரக்ஸ் 48
என்டிபிசி 20
ஜீ என்டா்டெயிண்ட்மென்ட் 19
அதானி என்டா்பிரைஸஸ் 18
பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் 15
பிா்லா சாஃ)ப்ட் 14
ஐஓபி 13
டாடா பவா் 12
ஐடிபிஐ பேங்க் 11