முகப்பு
வணிகம்

புதிய வரலாற்று உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 182 புள்ளிகள் உயர்வு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை மேலும் எழுச்சி பெற்று புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து,

Updated On : 9 டிசம்பர், 2020 at 3:47 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:34 PM

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை மேலும் எழுச்சி பெற்று புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 181.54 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டியும் 37.20 புள்ளிகள் உயர்ந்து 13,392.95 என்ற புதிய வரலாற்று உச்சத்தில் நிலைபெற்றது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இல்லாவிட்டாலும், இந்திய சந்தைகளில் காளையின் ஆதிக்கம் இருந்தது. குறிப்பாக பிஎஸ்யு பேங்க், ஐடி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மேலும், அந்நிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடுகளை அதிகரித்து வரும் நிலையில், ரிலையன்ஸ், டிசிஎஸ், இன்ஃபோசிஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகள் ஏற்றம் பெற்று சந்தை மேலும் வலுப்பெற காரணமாக இருந்தன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு ரூ.181.62 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,131 பங்குகளில் 1,493 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,461 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 177 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 302 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையை பதிவு செய்துள்ளன. 438 பங்குகள் வெகுவாக உயர்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பர் சர்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.46 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.181.62 லட்சம் கோடியாக இருந்தது.
 புதிய வரலாற்று உச்சம்:சென்செக்ஸ் காலையில் 141.83 புள்ளிகள் கூடுதலுடன் 45,568.80-இல் தொடங்கி 45,335.17 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 45,742.23 வரை உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 181.54 புள்ளிகள் உயர்ந்து 45,608.51-இல் நிலைபெற்றது.
 அல்ட்ரா டெக் சிமெண்ட் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 16 பங்குகள் ஆதாயம் பெற்றன. 14 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் அல்ட்ரா டெக் சிமெண்ட் 3.15 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டிசிஎஸ் (2.21 சதவீதம்), ரிலையன்ஸ் (1.82 சதவீதம்) உயர்ந்தன. மேலும், ஹெச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ், எஸ்பிஐ, கோட்டக் பேங்க், பஜாஜ் ஆட்டோ ஆகியவை 0.50 முதல் 1 சதவீதம் வரை உயர்ந்தன. எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.
 சன் பார்மா சரிவு: அதேசமயம், சன்பார்மா (2.36 சதவீதம்), இன்டஸ்இண்ட் பேங்க் (2 சதவீதம்) ஆகியவை வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. என்டிபிசி, டெக் மஹிந்திரா, ஓஎன்ஜிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், பார்தி ஏர்டெல் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன.
 தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 815 பங்குகள் ஆதாயம் பெற்றன. 922 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி 37.20 புள்ளிகள் (0.28 சதவீதம்) உயர்ந்து 13,392.95-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது 13,435.45 வரை உயர்ந்து மீண்டும் ஒரு புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.
 நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 19 பங்குகள் ஆதாயம் பெற்றன. 30 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. ஹிந்துஸ்தான் யுனிலீவர் மாற்றமின்றி 2,256.10-இல் நிலைபெற்றது. நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 7.13 சதவீதம் உயர்ந்தது. ஐடி, ரியால்டி குறியீடுகள் 0.80 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. பார்மா, மெட்டல் குறியீடுகள் 1.20 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.