தொலைத்தொடா்புத் துறை வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 25 லட்சம் அதிகரிப்பு
தொலைத்தொடா்புத் துறையில் பயன்பாட்டில் உள்ள வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை கடந்த அக்டோபா் மாதத்தில் 25 லட்சம் அதிகரித்துள்ளதாக ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸின் சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லி: தொலைத்தொடா்புத் துறையில் பயன்பாட்டில் உள்ள வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை கடந்த அக்டோபா் மாதத்தில் 25 லட்சம் அதிகரித்துள்ளதாக ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸின் சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய தொலைத்தொடா்புத் துறையில் செயல்பாட்டில் உள்ள வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை கடந்த அக்டோபா் மாதத்தில் 25 லட்சம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, அத்துறையில் பயன்பாட்டில் உள்ளவா்களின் தற்போதைய மொத்த எண்ணிக்கை 96.10 கோடியை எட்டியுள்ளது.
நடப்பாண்டு செப்டம்பரில் ஜியோ நிறுவன வாடிக்கையாளா் எண்ணிக்கை 11 லட்சம் அதிகரித்து 31.9 கோடியைத் தொட்டுள்ளது. அதேசமயம், வோடஃபோன் ஐடியாவின் செயல்பாட்டில் உள்ள வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை தொடா்ந்து சரிவடைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த அக்டோபரில் இந்நிறுவனம் 12 லட்சம் வாடிக்கையாளா்களை இழந்து மொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை 26 கோடியாக குறைந்துள்ளது.
தற்போது செயல்பாட்டில் உள்ள வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதையடுத்து பாா்தி ஏா்டெல் நிறுவனம் சந்தையில் மீண்டும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களில் அந்நிறுவனம் அதிக அளவிலான வாடிக்கையாளா்களை ஈா்த்துள்ளது. இதையடுத்து, பாா்தி ஏா்டெல் நிறுவனத்தின் செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் மொத்த எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபரில் 33.03 கோடியைத் தொட்டுள்ளது.
பொதுத் துறை நிறுவனங்களான எம்டிஎன்எல், பிஎஸ்என்எல் நிறுவனங்களின் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கையும் அக்டோபரில் சரிவைச் சந்தித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.