இன்றைய தினத்தில் அதிக லாபம் தரும் தொழில்களில் ஒன்றாக முயல் வளர்ப்பு கருதப்படுகிறது.
எனினும், முயல் வளர்ப்பது எப்படி, அதில் வெற்றி பெறுவது எப்படி என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கிறது. அந்தக் குழப்பத்தைப் போக்கும் வகையில், அரியலூர் மாவட்டம், கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பல்வேறு தகவல்களைத் தந்துள்ளார். பகுதிநேர வேலையாக முயல் வளர்ப்பில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ள அவர் இதுகுறித்து கூறியதாவது:
முயல் வளர்ப்புத் தொழிலைத் தொடங்கவிருப்பவர்கள், அதற்காக சிறியளவில் கீற்றுக்கொட்டகை அமைக்க வேண்டும். முதல் கட்டமாக ஒரு யூனிட் 7 முயல்களை (5 பெண், 2 ஆண்) வளர்க்கத் தேர்ந்தெடுக்கலாம். இவற்றை சரியான நாள்களில் இணை செய்து, அதை அட்டவணைப்படுத்தி வைக்க வேண்டும்.
அந்த அட்டவணையில் முயல்கள் எந்த தேதியில் இணை சேர்க்கப்படுகிறது. குட்டியை எப்போது ஈன்றெடுக்கிறது. மீண்டும் இணை சேர்க்கப்படும் நாள், அந்த குட்டியை இணை சேர்க்க வேண்டிய நாள் ஆகியவற்றைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இணை சேர்ப்புக்குப்பின் ஒரு முறை கர்ப்பமடையும் பெண் முயல் 4 முதல் 8 குட்டிகளை ஈன்றெடுக்கிறது. குட்டி ஈன்ற முயலுடன் 45 நாள்களுக்கு பிறகு ஆண் முயலை இணை சேர்த்தால்தான் பெண் முயல் ஆரோக்கியமான குட்டிகளை ஈன்றெடுக்கும். அதற்கும் குறைவான நாள்களில் இணை சேர்த்தால் குட்டிகள் மெலிந்து ஆரோக்கியமற்றுக் காணப்படும்.
அதேபோல், முயல் குட்டி ஈன்றெருக்க முக்காலுக்கு முக்கால் அடியும், அரையடி உயரமும் கொண்ட மரத்திலான மூடியில்லாத பெட்டியை வைக்க வேண்டும். அதில் முயல் தனது வயிற்றுப் பகுதிகளில் உள்ள முடிகளை பிய்த்து போட்டு தனது குட்டிகளை ஈன்றெடுக்கும். குட்டி 10 ஆவது நாளில்தான் கண் திறக்கும். அன்று வரை தாய் பால் மட்டுமே குட்டிக்கு உணவு. 15 வது நாள் முதல் குட்டியானது தனக்குத் தேவையான தீவனங்களை தின்ன ஆரம்பிக்கிறது. அதே நேரத்தில் குட்டி முயலானது தனது தாயிடம் 30 நாட்கள் வரை பால்குடிக்கும்.
அதன் பிறகு 15 நாள்கள் கழித்து 45 வது நாள்களுக்கு பிறகு தாய் முயலை இணை சேர்க்கலாம். அதேபோல், குட்டி முயல்கள் 5 முதல் 6 மாதத்துக்குள் பருவமடைந்து விடும். அதன் பிறகு அவற்றையும் இணை சேர்க்கலாம்.
தீவனத்தைப் பொருத்தவரை முயல்களுக்கு முட்டைகோஸ், காலிபிளவர் போன்றவற்றைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் அதிக அதிகளவு பூச்சி மருந்துகள் தெளிக்கப்படுவதால், முயல்கள் விரைவில் உயிரிழக்க நேரிடும்.
அதற்கு மாற்றாக வயல்களில் உள்ள புல், கோ-4 புல் ரகம், அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, கல்யாணமுருங்கை, அசோலா போன்றவற்றை உணவாக முயல்களுக்கு வழங்கும்போது திடமான உடலமைப்பை முயலிடம் காணமுடியும்.
இதில் அடர் தீவனமாக கோதுமை தவிடு, குச்சித்தீவனமும் தினமும் சிறிதளவு வழங்கலாம்.
மேலும் மாதமொரு நாள் வேப்பந்தழை கொடுக்கும்போது, முயலின் குடற்புழுக்கள் அழிக்கப்படுகின்றன என்றார் அவர்.
கறிக்காக வேண்டுமெனில் மேலும் பல யூனிட்கள் முயல்கள் வாங்கி, முழு நேரமாக வளர்த்தால் மட்டுமே கடைகளுக்கு கேட்கும் அளவிற்கு உற்பத்தி செய்து வழங்க முடியும்.
எவ்வளவு குளிர் இருந்தாலும் தாங்கி கொள்ளும் முயல்கள் வெப்பத்தை தாங்கிக் கொள்வதில்லை. அதற்காக குளிரோட்டமான இடத்தில்தான் முயல்கள் வளர்க்க வேண்டும். வளர்க்கப்படும் இடங்கள் சுகாதாரமாக இருக்கும் பட்சத்தில் முயல்களுக்கு நோய்களே இல்லை.
இரண்டு மாதக் குட்டிகள் ஜோடி தற்போது ரூ. 700 வரை விலைபோகிறது. ஒரு மாத குட்டிகள் ஜோடி ரூ.500 வரை விற்பனையாகின்றன.
இதன் மூலம், குறைந்தபட்சம் தோராயமாக மாதம் ரூ. 5 ஆயிரம் வரை கிடைக்கும். முழுநேர தொழிலாகவும், கறிக்கடைகளுக்கு விற்பனை செய்யும் நோக்கத்திலும் முயல் வளர்ப்பில் ஈடுபட்டால் மாதம் ரூ.30 ஆயிரம் வரை ஒருவர் சம்பாதிக்கலாம் என்றார் அவர்.
படித்து விட்டு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களும், குறைவாக சம்பளத்துக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்களும் இதுபோல சுய தொழிலை செய்தும் முன்னேறலாம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
- சி. சண்முகவேல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.