பங்குச் சந்தையில் எழுச்சி: சென்செக்ஸ் 499 புள்ளிகள் உயர்வு!
கடந்த இரண்டு நாள்களாக எதிர்மறையாக இருந்து வந்த பங்குச் சந்தை, புதன்கிழமை எழுச்சி பெற்றது. இதனால், சென்செக்ஸ் 499 புள்ளிகள் உயர்ந்தது.
கடந்த இரண்டு நாள்களாக எதிர்மறையாக இருந்து வந்த பங்குச் சந்தை, புதன்கிழமை எழுச்சி பெற்றது. இதனால், சென்செக்ஸ் 499 புள்ளிகள் உயர்ந்தது.
காலையில் ஒரு கட்டத்தில் சந்தை தள்ளாட்டத்தில் இருந்தாலும், பிற்பகலில் வங்கிகள், நிதி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கு நல்ல ஆதரவு இருந்தது. குறிப்பாக மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாக உயர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை எழுச்சி பெற உதவியாக இருந்தன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, உலகளாவிய பங்குச் சந்தைகள் ஏற்றம் பெற்ற நிலையில், அதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மும்பை பங்குச் சந்தையில் மொத்த வர்த்தகமான 2,902 பங்குகளில் 1,484 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,287 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 131 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 133 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 63 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 484 பங்குகள் வெகுவாக உயர்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 311 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன. வர்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.140 லட்சம் கோடியாக இருந்தது.
சென்செக்ஸ் காலையில், 94 புள்ளிகள் கூடுதலுடன் 35,009.59-இல் தொடங்கி 34,927.20 வரை கீழே சென்றது. பின்னர், பிற்பகலில் எழுச்சி பெற்று 35,467.23 வரை உயர்ந்தது. இறுதியில் 498.65 புள்ளிகள் (1.43 சதவீதம்) உயர்ந்து 35,414.45-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 127.95 புள்ளிகள் (1.24 சதவீதம்) உயர்ந்து 10,430.05-இல் நிலைபெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. இதில், ஆக்ஸிஸ் பேங்க் 6.58 சதவீதம், பஜாஜ் ஃபின்சர்வ் 5.58 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி ஆகியவை 4 முதல் 4.60 சதவீதம் உயர்ந்தன. மேலும், இண்டஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை 2 முதல் 3.80 சதவீதம் வரை உயர்ந்தன.
அதே சமயம் என்டிபிசி, எம் அண்ட் எம், எல் அண்ட் டி, நெஸ்ட்லே இந்தியா ஆகியவை 2 முதல் 2.40 சதவீதம் குறைந்து, வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், மாருதி சுஸுகி, இன்ஃபோஸிஸ், ஹிந்துயுனி லீவர், இன்ஃபோஸிஸ், கோட்டக் பேங்க் ஆகிய முன்னணிப் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
தேசிய பங்குச் சந்தையில் 870 பங்குகள் ஆதாயம் பெற்றன. 756 பங்குகள் வீழ்ச்சியடைந்த பட்டியலில் வந்தன. நிஃப்டி பிஎஸ்யு பேங்கு குறியீடு 3.65 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ் 2.50 முதல் 3 சதவீதம் வரை உயர்ந்தன. பார்மா குறியீடு 1.02 சதவீதம் சரிவைச் சந்தித்து. ஆட்டோ, ஐடி, ரியால்ட்டி குறியீடுகள் சிறிதளவு வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 26 பங்குகள் ஆதாயம் பெற்றன. 23 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்த பட்டியலில் வந்தன. ஏசியன் பெயிண்ட்ஸ் மட்டும் மாற்றமின்றி ரூ.1,687.40-இல் நிலைபெற்றது.