வணிகம்

ஈரோடு மாட்டுச் சந்தைக்கு 4 மாதங்களாகத் தடை... ரூ.70 கோடி வர்த்தகம் பாதிப்பு

வாரம்தோறும் நடைபெறும் சந்தையில் ரூ. 4 கோடி முதல் ரூ. 4.50 கோடி வரை மாடுகள் வர்த்தகம் இருக்கும். தென் மாநிலங்களில் சீமைப் பசு, எருமை மாடு என பால் மாடுகளுக்கான சந்தையில் முதலிடத்தில் ஈரோடு சந்தை உள்ளது.

கே.விஜயபாஸ்கா்


தமிழக அளவில் மணப்பாறை, கண்ணபுரம், ஒட்டன்சத்திரம், திருச்செங்கோடு அருகே மோர்பாளையம், கரூர் அருகே உப்பிடமங்கலம், பொள்ளாச்சி சந்தைகளைப்போல், ஈரோடு மாட்டுச் சந்தையும் பிரபலமானது. 100 ஆண்டுகளுக்குமேல் பாரம்பரியம் கொண்ட ஈரோடு மாட்டுச் சந்தை தொடக்கத்தில், இப்போது பேருந்து நிலையம் உள்ள இடத்தில் செயல்பட்டு வந்தது. இங்கு பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட பிறகு இந்த சந்தை ரயில் நிலையம் அருகிலும், பிறகு கருங்கல்பாளையம் பகுதிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டது. 

இப்போது ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை சோதனைச் சாவடி அருகில் மாட்டுச் சந்தை செயல்பட்டு வருகிறது. வாரம்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் இந்த மாட்டுச் சந்தைக்கு மாடுகளை விற்பனை செய்வதற்காக தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, திருப்பூர், கரூர், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் வருவர்.   

மாடுகளை வாங்கிச் செல்வதற்காக கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து செல்வர். இதனால், வாரம்தோறும் நடைபெறும் சந்தையில் ரூ. 4 கோடி முதல் ரூ. 4.50 கோடி வரை மாடுகள் வர்த்தகம் இருக்கும். தென் மாநிலங்களில் சீமைப் பசு, எருமை மாடு என பால் மாடுகளுக்கான சந்தையில் முதலிடத்தில் ஈரோடு சந்தை உள்ளது. இந்த சந்தையில் வாரம் சுமார் 700 மாடுகள், 200 வளர்ப்புக் கன்றுக் குட்டிகள் விற்பனையாகும். 

தற்போது கரோனா பொது முடக்கத்தால் மார்ச் 16ஆம் தேதி முதல் மாட்டுச் சந்தை செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மாட்டுச் சந்தை செயல்படத் தொடர்ந்து தடை இருந்து வருகிறது. 

இதனால், கடந்த 4 மாதங்களாக வியாபாரிகளும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாடுகளை விற்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:
கரோனா பொது முடக்கத்தால் கடந்த 4 மாதங்களாக மாட்டுச் சந்தை செயல்படாததால் சுமார் ரூ. 70 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளதால் போதிய வேலைவாய்ப்பும் இல்லை. இதனால், விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்க விரும்பினாலும் மாட்டுச் சந்தை செயல்படாத நிலையில் மாடுகளை விற்க முடியாத நிலை இருந்து வருகிறது. 

5,000 பேரின் வாழ்வாதாரம் பாதிப்பு
சந்தை நடைபெறாததால் விவசாயிகள், வியாபாரிகள், சந்தையை நம்பியுள்ள சுமார் 5,000 பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்றார் சந்தையை நிர்வகித்து வந்த முருகன். 

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
சந்தைக்கு வாரம்தோறும் 1,000க்கும் மேற்பட்ட வியாபாரிகள், 1,500க்கும் மேற்பட்ட தரகர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு வாரம் ரூ. 500 முதல் ரூ. 5,000 வரை வருமானம் கிடைக்கும். தினமும் ஒரு சந்தைக்கு செல்லும் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல லாடம் கட்டவும், கொம்பு சீவவும் 10 பேர் வரை வருவர். வாரம் ரூ. 2,000 முதல் ரூ. 5,000 வரை வருமானம் ஈட்டும் இவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. 
தவிர சந்தை வளாகத்தில் 5 சிறிய ஹோட்டல்கள் திறக்கப்படாததால் இந்த ஹோட்டல்களை நம்பியுள்ள 10க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.  தவிர மாடுகளுக்குத் தேவையான மணிக்கயிறு, மூக்கணாங்கயிறு, சாட்டை, மணிகள், கழுத்துப் பட்டைகள் போன்றவை விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. 10க்கும் மேற்பட்ட கடைகளில் வாரம் ரூ. 2,000 முதல் ரூ. 5,000 வரை வியாபாரம் நடைபெறும். இப்போது சந்தை இல்லாததால் இந்தக் கடைகளை நம்பியுள்ளவர்களும் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்றார். 

600 வாகனங்களுக்கு வேலையிழப்பு 
கிராமங்களில் சந்தைக்கு மாடுகளை ஏற்றி வர சுமை ஆட்டோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் சுமார் 500 சுமை ஆட்டோக்களுக்கு கடந்த 4 மாதங்களாக வேலையில்லாமல் போய்விட்டது. தவிர மாடுகளை மொத்தமாக ஏற்றிச் செல்ல சுமார் 100 வேன்கள், லாரிகள் பயன்படுத்தப்பட்டன. அந்த வாகனங்கக்கு இப்போது வேலை இல்லை. இதனால், 600க்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு வாரம்தோறும் கிடைக்கும் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது என சுமை ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.   

விவசாயிகள் பாதிப்பு 
இது குறித்து ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியைச் சேர்ந்த விவசாயி தங்கவேல் கூறியதாவது:  விவசாயிகள் குடும்பத் தேவைக்கு கால்நடைகளை விற்பனை செய்வர். அந்த வகையில் கல்விக் கட்டணம் செலுத்துதல், திருமணம் உள்ளிட்ட சுபகாரிய செலவு போன்றவற்றுக்கு மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர். இப்போது தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை செலுத்த பெற்றோருக்கு நெருக்கடி அளித்து வரும் நிலையில், மாடுகளை சந்தைக்கு கொண்டு வந்து விற்க முடியாமல் வீடு தேடி வரும் வியாபாரிகளிடம் வந்த விலைக்கு மாடுகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

தவிர தற்போது காற்றடி காலம் தொடங்கிவிட்டதால், மாடுகளுக்குத் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டு பால் குறையும். இந்த சமயத்தில்தான் ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருவர். சந்தை முடங்கியுள்ளதால் மாடுகளை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT