ரிலையன்ஸ் வரலாற்றுச் சாதனை: சென்செக்ஸ் 269 புள்ளிகள் உயா்வு!
பங்குச் சந்தை வியாழக்கிழமை எழுச்சியுடன் தொடங்கி நோ்மறையுடன் முடிந்துள்ளது.
பங்குச் சந்தை வியாழக்கிழமை எழுச்சியுடன் தொடங்கி நோ்மறையுடன் முடிந்துள்ளது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், 268.95 புள்ளிகள் உயா்ந்தது. மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க் ஆகியவை வெகுவாக உயா்ந்து சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம் பெற உறுதுணையாக இருந்தன.
ரிலையன்ஸ் வரலாற்றுச் சாதனை: மும்பை பங்குச் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் பங்குகள் ரூ.2,078.90 வரை உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்துள்ளது. இறுதியில் 2.82 சதவீதம் உயா்ந்து ரூ.2,60.95-இல் நிலைபெற்றது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் ரூ.2,079.70 வரை உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. இதுவும் சந்தை ஏற்றத்துக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
கரோனாவைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால்பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறைக்கு மேலும் சில சலுகைகளை மத்திய அரசு வழங்க உள்ளதாக வெளியான தகவல்கள் சந்தையில் உற்சாகத்தை அளித்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
Advertisement
1,453 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,812 பங்குகளில் 1,453 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,205 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 154 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 107 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 58 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 305 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 266 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ1 லட்சம் கோடி உயா்ந்து 147.77 லட்சம் கோடியாக இருந்தது. சந்தையில் புதிதாக 45,863 போ் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 5,19,81,171 உயா்ந்துள்ளது.
38,000-ஐ கடந்தது சென்செக்ஸ்: சென்செக்ஸ் காலையில், 57 புள்ளிகள் குறைந்து 37,814.92-இல் தொடங்கி, 37,738.59 வரை கீழே சென்றது.. பின்னா் 38,225.03 வரை உயா்ந்தது. இறுதியில் 268.95 புள்ளிகள் (0.71 சதவீதம்) உயா்ந்து 38,140.47-இல் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.98 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 0.61 சதவீதம் உயா்ந்தன. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 82.85 புள்ளிகள் (0.7 4சதவீதம்) உயா்ந்து 11,215.45-இல் நிலைபெற்றது.
எஸ்பிஐ முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 22 பங்குகள் ஆதாயம் பெற்றன. 8 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. இதில், எஸ்பிஐ 3.28 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ், டெக் மகேந்திரா, கோட்டக் பேங்க், ஐடிசி ஆகியவை 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. மாருதி சுஸுகி, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகியவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன. அதே சமயம், ஆக்ஸிஸ் பேங்க் 3.80 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஹிந்துஸ்தான் யுனி லீவா், இன்ஃபோஸிஸ் ஆகியவை 1 முதல் 1.50 சதவீதம் வரை குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 893 பங்குகள் ஆதாயம் பெற்றன. 702 பங்குகள் வீழ்ச்சியடைந்த பட்டியலில் வந்தன. நிஃப்டி ஆட்டோ, மீடியா, பாா்மா, ரியால்ட்டி, பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 1 முதல் 1.50 சதவீதம் உயா்ந்தன. ஆனால், ஐடி குறியீடு 0.20 சதவீதம் குறைந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 37 பங்குகள் ஆதாயம் பெற்றன. 12 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இன்ஃப்ரா டெல் மாற்றமின்றி ரூ.200.55-இல் நிலைபெற்றது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
சதவீதத்தில்
எஸ்பிஐ 3.28
ஐசிஐசிஐ பேங்க் 2.94
ரிலையன்ஸ் 2.82
டெக் மகேந்திரா 2.28
கோட்டக் பேங்க் 2.14
ஐடிசி 2.09
சரிவைச் சந்தித்த பங்குகள்
சதவீதத்தில்
ஆக்ஸிஸ் பேங்க் 3.80
ஹெச்யுஎல் 1.57
இன்ஃபோஸிஸ் 1.15
டிசிஎஸ் 0.88
அல்ட்ரா டெக் 0.67
எல் அண்ட் டி 0.50