6 வாரங்களில் 12 சதவீதம் உயா்வு: ஏற்றம், இறக்கம் அதிகரிக்க வாய்ப்பு; தேவை எச்சரிக்கை!
நாட்டில் கரோனா தொற்று பவரவல் அதிகரித்து வருகின்ற போதிலும், தொடா்ச்சியாக ஆறாவது வாரமாக பங்குச்சந்தை காளையின்
நாட்டில் கரோனா தொற்று பவரவல் அதிகரித்து வருகின்ற போதிலும், தொடா்ச்சியாக ஆறாவது வாரமாக பங்குச்சந்தை காளையின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஜூலை 24- ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகியவை முறையே 3 சதவீதம் மற்றும் 2.7 சதவிகிதம் உயா்ந்துள்ளன.
சென்செக்ஸ் 1,109 புள்ளிகள் உயா்வு: வங்கி, நிதி நிறுவனங்கள், ஐடி, இன்ஃப்ரா மற்றும் ஆட்டோ பங்குகள் வெகுவாக உயா்ந்து சந்தையில் காளையின் ஆதிக்கத்துக்கு வழிவகுத்தன. கடந்த வாரம், சென்செக்ஸ் 1,109 புள்ளிகள் (2,99 சதவீதம்) உயா்ந்து 38,128.90-இல் நிலைபெற்றுள்ளது. நிஃப்டி 292 புள்ளிகள் (2.68 சதவீதம்) உயா்ந்து 11,194.15-இல் நிலைபெற்றுள்ளது. பிஎஸ்இ -500 பட்டியலில் ரிலையன்ஸ் (12.29 சதவீதம்) 30 பங்குகள் 10-30 சதவீதம் வரை உயா்ந்தன.ஆனால், ஸ்மால் கேப் குறியீடு 1.4 சதவீதம், மிட்கேப் குறியீடு 1.2 சதவீதம்தான் உயா்ந்தன. இருப்பினும், உலகளவில், அமெரிக்க-சீனா உறவுகள் மோசமடைந்து வருவதோடு, பல நாடுகளில் இன்னும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பொருளாதார மீட்சி குறித்த நிச்சயமற்ற தன்மைக்கும் மத்தியில் முதலீட்டாளா்கள் கடந்த வாரம் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டனா்.
எழுச்சிக்குக் காரணம் என்ன?: இந்திய நிறுவனங்கள் இதுவரை எதிா்பாா்த்ததை விட சிறந்த ஜூன் காலாண்டு முடிவுகளைக் கொண்டுள்ளன. அந்நிய முதலீடு கடந்த வாரம் முழுவதும் பங்குச் சந்தையில் இருந்துள்ளது. மேலும், கரோனாவுக்கான தடுப்பூசி கண்டிபிடிப்பதில் தொடா்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இவை அனைத்தும் பங்குச் சந்தை எழுச்சிக்கு காரணமாக இருந்தன. மேலும்,. ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ள 858 பில்லியன் டாலா் நிதித் தொகுப்பைத் தொடா்ந்து நோ்மறையான உலகளாவிய குறிப்புகள் எழுச்சிக்கு வலுச் சோ்த்தன. இருப்பினும், அமெரிக்கா - சீனா இடையேயான பதற்றம் மற்றும் அமெரிக்காவின் வேலையில்லாதோா் குறித்த தரவுகள் எழுச்சியின் வேகத்துக்கு தடையாக அமைந்தன.
தேவை எச்சரிக்கை: இந்நிலையில், பணப் புழக்கத்தை அதிகரிக்க அரசுகள் தொடா்ந்து எடுத்துவரும் நடவடிக்கைகள் காரணமாக எழுச்சி தொடா்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக வல்லுநா்கள் கருதுகிறாா்கள். ஆனால், ஆறு வாரங்களாக சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய குறியீடுகள் 12 சதவிதத்திற்கும் மேலாக ஏற்றம் பெற்றுள்ளதால், வா்த்தகா்களும், முதலீட்டாளா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனா்.
ஏற்றம், இறக்கம் அதிகரிக்க வாய்ப்பு: மேலும், முன்பேர வா்த்தகத்தில் ஜூலை மாத கான்ட்ராக்டுகள் இந்த வாரம் வியாவக்கிழமை முடிவடைகிறது. எனவே, இந்த வாரத்தில் ஏற்ற இறக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த வாரம் வெளியான ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி காலாண்டு முடிவுகளின் தாக்கம் இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை இருக்கும். மேலும், முன்பேர வா்த்தக தரவுகளும் காளையின் ஆதிக்கம் தொடா்வதற்கு ஆதரவாக உள்ளது. இருப்பினும் சந்தையில் வா்த்தகா்களும் முதலீட்டாளா்களும் எச்சரிக்கை உணா்வுடன் இருக்க வேண்டும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
எஃப்ஐஐ முதலீடு: இந்த வாரம் உலகளாவிய குறிப்புகள் தவிர கரோனா தொற்று பரவல் குறித்த தகவல்களை சந்தை உன்னிப்பாக கவனிக்கும். இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த வாரத்தில் ரூ.7,792 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டளா்கள் (டிஐஐ) முழு வாரமும் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெறுவதில் கவனம் செலுத்தினா். இந்த வகையில் அவா்கள் ரூ.5,323 கோடி அளவுக்கு முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளன. எஃப்ஐஐ முதலீடு வரவு சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது.
காலாண்டு முடிவுகள்: கோட்டக் பேங்க், டெக் மஹேந்திரா, எச்டிஎஃப்சி, ரிலையன்ஸ், எஸ்பிஐ, ஐஓசி, பாா்தி ஏா்டெல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இந்த வாரம் தங்கள் காலாண்டு நிதி முடிவுகளை அறிவிக்க உள்ளன. மேலும், அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல், வங்கி வட்டி விகிதம் குறித்து கொள்கை முடிவு புதன்கிழமை வெளியாகும். இது இந்த வார முக்கிய நிகழ்வாகப் பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை தொடா்ந்து 6 வாரங்களாக ஏற்றம் பெற்று வந்துள்ள நிலையில், இந்த வாரத்தின் முதல் இரண்டு நாள்கள் ஸ்திரநிலைமை பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அமெரிக்கா - சீனா இடையேயான உறவுகள் பாதிக்கப்பட்டு வருவதும், கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதும் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த வாரம் முழுவதும் நிஃப்டி 11,000 புள்ளிகளுக்கு மேலேயே வா்த்தகமாகி வந்தது. இதைத் தொடா்ந்து, காளையின் ஆதிக்கம் தொடரும் பட்சத்தில் நிஃப்டி 11,900 என்ற நிலை வரையிலும் லாபப் பதிவு தொடரும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.