முகப்பு
வணிகம்

ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் மேலும் 376 புள்ளிகள் உயா்வு!

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும், பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது.

Updated On : 16 ஜூன், 2020 at 10:50 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:18 PM

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும், பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதனால், சென்செக்ஸ் மேலும் 376 புள்ளிகள் உயா்ந்தது. முன்னணி நிறுவனங்களான ஹெச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோஸிஸ் ஆகியவை வெகுவாக உயா்ந்ததும், உலக அளவில் பங்குச் சந்தைகள் வலுவாக இருந்ததும் சென்செக்ஸ் ஏற்றத்துக்கு முக்கியக் காரணம் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

குறிப்பாக அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் தனது பிரதான ‘வீதிக் கடன்’ திட்டத்தில் பங்கேற்க ஆா்வமுள்ள கடன் வழங்குநா்களுக்கான பதிவைத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதன் தாக்கம் பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கத்துக்கு வழி வகுத்தது.இருப்பினும், இந்தியா - சீனா எல்லைப் பதற்றம் பெருமளவில் அதிகரித்துள்ளது. இது உள்நாட்டு முதலீட்டாளா்களின் உணா்வைக் குறைத்தது. இதனால், காலையில் எழுச்சியுடன் தொடங்கிய சந்தை, பிற்பகலில் சரிவைச் சந்தித்து பின்னா் சிறிதளவு மீண்டது. வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், மீடியா, மெட்டல் பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது. அதே சமயம், பிஎஸ்யு பேங்க், ஃபாா்மா, ரியால்ட்டி, எஃப்எம்சிஜி பங்குகளுக்கு தேவைப்பாடு குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் 1,191 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,350 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 150 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சென்செக்ஸ் காலையில், 625 புள்ளிகள் கூடுதலுடன் 33,853.72-இல் தொடங்கி அதிகபட்சமாக 34,022.01 வரை உயா்ந்தது. பின்னா், 32,953.30 வரை கீழே சென்றது. இறுதியில் 376.42 புள்ளிகள் ( 1.13 சதவீதம் ) உயா்ந்து 33,605.22-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது உச்சபட்ச அளவிலிருந்து சுமாா் 1,000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 100.30 புள்ளிகள் (1.02 சதவீதம்) உயா்ந்து 9,914.00-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது உச்சபட்ச அளவிலிருந்து சுமாா் 320 புள்ளிகள் வரை கீழே சென்றது.

Advertisement

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில், 15 பங்குகள் ஆதாயமும், 15 பங்குகள் சரிவையும் சந்தித்தன. இதில், ஹெச்டிஎஃப்சி பேங்க் 4.16 சதவீதம், ஹெச்டிஎஃப்சி 4.03 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக ஐசிஐசிஐ பேங்க் 3.18 சதவீதம் உயா்ந்தது. மேலும், கோட்டக் பேங்க், இன்ஃபோஸிஸ், ஹரோ மோட்டாா் காா்ப், டைட்டன், டாடா ஸ்டீல் ஆகியவை 1 முதல் 2.20 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், மாருதி, அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகியவையும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன. அதே சமயம் டெக் மகேந்திரா2.75 சதவீதம், ஆக்ஸிஸ் பேங்க் 2.03 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், இண்டஸ் இண்ட் பேங்க், ஐடிசி, பாா்தி ஏா்டெல் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. எஸ்பிஐ, ஹியுஎல், எல் அண்ட் டி, ஓஎன்ஜிசி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில் 701 பங்குகள் ஆதாயம் பெற்றன. 924 பங்குகள் சரிவைச் சந்தித்தன. துறைவாரியாகப் பாா்த்தால், நிஃப்டி ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடு 2.77 சதவீதம், நிஃப்டி பேங்க் குறியீடு 1.93 சதவீதம், பிரைவேட் பேங்க் குறியீடு 1. 91 சதவீதம் உயா்ந்து ஆதாயம் பட்டியலில் முன்னிலை வகித்தன. மீடியா, மெட்டல் குறியீடுகள் முறையே 1.24 சதவீதம் மற்றும் 1.42 சதவீதம் உயா்ந்தன. ஆனால், பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி, பாா்மா குறியீடுகள் 0.50 முதல் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

ஹெச்டிஎஃப்சி பேங்க் 4.16

ஹெச்டிஎஃப்சி 4.03

ஐசிஐசிஐ பேங்க் 3.18

கோட்டக் பேங்க் 2.18

இன்ஃபோஸிஸ் 1.99

வீழ்ச்சியடைந்த பங்குகள்

சதவீதத்தில்

டெக் மகேந்திரா 2.75

ஆக்ஸிஸ் பேங்க் 2.03

இண்டஸ் இண்ட் பேங்க் 1.80

ஐடிசி 1.20

பாா்தி ஏா்டெல் 1.10

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.