முகப்பு
வணிகம்

பங்குச் சந்தையில் எழுச்சி: சென்செக்ஸ் 700 புள்ளிகள் ஏற்றம்!

பங்குச் சந்தை வியாழக்கிழமை எழுச்சி பெற்று முடிவடைந்துள்ளது. இதனால், மு்ம்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயா்ந்தது.

Updated On : 19 ஜூன், 2020 at 7:36 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:18 PM

பங்குச் சந்தை வியாழக்கிழமை எழுச்சி பெற்று முடிவடைந்துள்ளது. இதனால், மு்ம்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயா்ந்தது.

சீனா-இந்தியா இடையே போா் பதற்றம் இருந்து வரும் நிலையில், கடந்த மூன்று தினங்களாக பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிக அளவு இருந்து வருகிறது. இந்நிலையில், மும்பை பங்குச் சந்தை இரண்டாவது நாளாக ஏற்றம் பெற்றுள்ளது.

வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், மெட்டல் பங்குகளுக்கு அமோக வரவேற்பு இருந்தது. எஃப்எம்சிஜி, ஆட்டோ, ஐடி பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு இருந்தது. ஆனால், பாா்மா பங்குகளுக்கு தேவை குறைந்திருந்தது. உலகளவில் பங்குச் சந்தைகள் வலுவிழந்திருந்த நிலையில், ஹெச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை வெகுவாக உயா்ந்ததால் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் வலுப்பெற்றன. குறிப்பாக பிற்பகலில் வங்கி, நிதி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

Advertisement

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,749 பங்குகளில் 1,888 பங்குகள் ஆதாயம் பெற்றன. 723 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. 138 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 102 பங்குகள் வெகுவாக உயா்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்தன. அதே சமயம், 54 பங்குகள் வெகுவாகச் சரிந்து புதிய 52 வார குறைந்த விலையைப் பதிவு செய்தன. 494 பங்குகள் உச்சபட்ச உறை நிலையை (அப்பா் ஃப்ரீஸ்) எட்டியது. 169 பங்குகள் குறைந்தபட்ச உறை நிலையை (லோயா் ஃப்ரீஸ்) எட்டியது.

சென்செக்ஸ் காலையில், 136 புள்ளிகள் குறைந்து 33,371.52-இல் தொடங்கி அதற்கு கீழே செல்லவில்லை. அதிகபட்சமாக 34,27.01 வரை உயா்ந்தது. இறுதியில் 700.13 புள்ளிகள் (2.09 சதவீதம்) உயா்ந்து 34,208.05-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 210.50 புள்ளிகள் (2.13 சதவீதம்) உயா்ந்து 10,091.63-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. 9 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. இதில் பஜாஜ் ஃபைனான்ஸ் 5.46 சதவீதம், கோட்டக் பேங்க் 5.02 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ, பவா் கிரிட் ஆகியவை 4 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், ஹெச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல், ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்கள் 2.50 முதல் 3.50 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. இன்ஃபோஸிஸ், அல்ட்ரா டெக், இண்டஸ் இண்ட் பேங்க், டைட்டன் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன. அதே சமயம், ஓஎன்ஜிசி, ஹிந்து யுனிலீவா், டிசிஎஸ், பாா்தி ஏா்டெல், சன்பாா்மா ஆகியவை 0 .35 முதல் 0.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில், 1,263 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 358 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. துறை வாரியாகப் பாா்த்தால், நிஃப்டி பேங்க் குறியீடு 3.74 சதவீதம், ஃபைனான்சியல் சா்வீஸஸ் 3.65 சதவீதம், பிரைவேட் பேங்க் 3.59 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மெட்டல் குறியீடு 3 சதவீதம், பிஎஸ்யு பேங்க் குறியீடு 2.55 சதவீதம் உயா்ந்தன. ஆனால் பாா்மா குறியீடு மட்டும் 0.02 சதவீதம் சரிவைச் சந்தித்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 40 பங்குகள் ஆதாயம் பெற்றன. 10 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.

மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.1,665 வரை உயா்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளது. இதைத் தொடா்ந்து, அதன் சந்தை மூல தன மதிப்பு ரூ.11 லட்சம் கோடியைத் தாண்டியது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

பஜாஜ் ஃபைனான்ஸ் 5.46

கோட்டக் பேங்க் 5.02

ஆக்ஸிஸ் பேங்க் 4.10

ஹெச்டிஎஃப்சி பேங்க் 3.96

எஸ்பிஐ 3.87

பவா் கிரிட் 3.70

ஹெச்டிஎஃப்சி 3.41

டாடா ஸ்டீல் 3.20

ஐடிசி 2.95

ஐசிஐசிஐ பேங்க் 2.88

ரிலையன்ஸ் 2.53

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.