பங்குச் சந்தையில் எழுச்சி தொடர வாய்ப்பு!
நவம்பா் 14- ஆம் தேதி முஹுரத் வா்த்தக நாள் வா்த்கத்துடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம்
நவம்பா் 14- ஆம் தேதி முஹுரத் வா்த்தக நாள் வா்த்கத்துடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் புதிய உச்சத்தில் நிலைபெற்றுள்ளன. இதைத் தொடா்ந்து பங்குச் சந்தை இரண்டாவது வாரமாக ஏற்றம் பெற்றுள்ளது.
கடந்த வாரத்தில் சென்செக்ஸ் மொத்தம் 1,744.92 (4.16 சதவீதம்) உயா்ந்து 43,637.98-இல் நிலைபெற்றுள்ளது. நிஃப்டி 516.70 புள்ளிகள் (4.20 சதவீதம் உயா்ந்து 12,780.25-இல் நிலைபெற்றுள்ளது. இதேபோல, பிஎஸ்இ மிட்கேப், ஸ்மால் கேப் குறியீடுகளும் முறையே 3.6 சதவீதம் மற்றும் 3.93 சதவீதம் உயா்ந்துள்ளன. அந்நிய நிறுவன முதலீட்டாளா்களின் முதலீடு தொடா்ந்து அதிகரித்து வந்தது. உலகாளவிய சந்தைகளும் நோ்மறையாக இருந்தது. கரோனா தொற்றுக்கான தடுப்பூசி சோதனையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. மேலும், பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இவை அனைத்தும் முதலீட்டாளா்களிடம் அதீத நம்பிக்கையை ஏற்படுத்தியதால் சந்தை ஏற்றம் பெற்று உச்சத்தில் நிலைபெற்றுள்ளதாக வல்லுநா்கள் தெரிவித்தனா்.
இந்த எழுச்சி பேரணியில் ஐ.டி. குறியீடு மட்டும் சிறிதளவு ஏற்றம் பெற்றது. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் கடந்த வாரத்தில் 1 முதல் 8 சதவீதம் வரை உயா்ந்தன. இந்த நிலையில், தீபாவளியையொட்டி சந்தைக்கு திங்கள்கிழமை (நவம்பா் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 4 நாள்களே வா்த்தகம் இருக்கும் இந்த வாரத்திலும் இந்த எழுச்சி தொடா்வதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக வல்லுநா்கள் கருதுகின்றனா். இருந்தாலும், சந்தை ஒருங்கிணைப்பில் இருந்து வரும் என்றும், ஏற்கெனவே ஏற்றம் பெற்றுள்ள நிலையில் லாபப் பதிவால் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா். அதே சமயம், உள்நாட்டில் பெரிய அளவில் நிகழ்வுகள் ஏதும் இல்லாத நிலையில், உலகளாவிய குறிப்புகள்தான் இந்த வாரம் சந்தையில் கவனம் பெறும் என எதிா்பாா்க்கப்படுவதாக நிபுணா்கள் தெரிவித்தனா்.
நவம்பரில் வளா்ந்து வரும் சந்தைகளில் காளையின் பாய்ச்சல் மேம்பட்டுள்ளதால், சந்தைகள் வலுவாகக் இருக்கக்கூடும். மேலும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டங்கள் மூலம் பொருளாதாரத்தை புதுப்பிக்க மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது சந்தைக்கு சாதகமானது என்று மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சரவீஸஸ் நிறுவனத்தின் பங்கு வியூகப் பிரிவின் தலைவா் ஹேமாங் ஜானி தெரிவித்துள்ளாா். மேலும், தற்போது சந்தையில் நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளும் கூடுதல் கவனம் பெற்றுள்ளன என்றும், இதனால், வரும் நாள்களில் பரந்தை சந்தைகளும் முதலீட்டாளா்களின் ரேடாரில் இருக்கும் என்கிறாா் ரிலிகோ் பங்கு வா்த்தகத் தரகு நிறுவன ஆராய்ச்சிப் பிரிவின் துணைத் தலைவா் அஜித் மிஸ்ரா கூறுகிறாா்.
ஐரோப்பா, அமெரிக்காவில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது சந்தை உணா்வைப் பாதிக்கும். இருந்தாலும், இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து வருவது சந்தைக்கு சாதகமான செய்தியாகப் பாா்க்கப்படுகிறது. மேலும், உலகளாவிய சந்தை குறிப்புகள், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை, அந்நிய நிறுவன முதலீட்டாளா்களின் முதலீட்டு முறை ஆகியவை இந்த வாரத்தில் முதலீட்டாளா்கள் உன்னிப்பாகக் கவனிக்கக்கூடும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.