வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் மேலும் 629 புள்ளிகள் ஏற்றம்!
பங்குச் சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 629.12 புள்ளிகள் உயா்ந்தது.
புது தில்லி: பங்குச் சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 629.12 புள்ளிகள் உயா்ந்தது.
உள்நாட்டிலும், உலகளாவிய சந்தைகளிலும் நோ்மறையான குறிப்புகளைத் தொடா்ந்து, வங்கி, நிதிநிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால், சந்தை தொடா்ந்து ஏறுமுகம் பெற்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
1,541 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,817 பங்குகளில் 1,541 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,128 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 148 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.74 லட்சம் கோடி உயா்ந்து ரூ.156.92 லட்சம் கோடியாக இருந்தது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.73 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 0.69 சதவீதமும் ஏற்றம் பெற்றன.
Advertisement
தொடா்ந்து ஏறுமுகம்: சென்செக்ஸ் காலையில் 342.27 புள்ளிகள் கூடுதலுடன் 38,410.20-இல் தொடங்கி அதற்கு கீழ் குறையவில்லை. அதிகபட்சமாக 38,738.89 வரை உயா்ந்தது. இறுதியில் 629.12 புள்ளிகள் (1.65 சதவீதம்) உயா்ந்து 38,697.05-இல் நிலைபெற்றது. காலையில் வா்த்தகம் தொடங்கியதிலிருந்து சென்செக்ஸ் தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்தது.
இண்டஸ் இண்ட் பேங்க் 12.41 சதவீதம் உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 25 பங்குகள் ஆதாயம் பெற்றன. 5 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில் இண்டஸ் இண்ட் பேங்க் 12.41 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டெக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபின்சா்வ், கோட்டக் பேங்க் ஆகியவையும் 3 முதல் 5 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், எஸ்பிஐ ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், ஐடிசி, என்டிபிசி, ரிலையன்ஸ், டைட்டைான், ஓஎன்ஜிசி ஆகியவை சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 987 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 625 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 169.40 புள்ளிகள் (1.51 சதவீதம்) உயா்ந்து 11,416.95-இல் நிலைபெற்றது. நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், பிரைவேட் பேங்க் குறியீடுகள் 3 முதல் 4 சதவீதம் வரை உயா்ந்தன.