விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா? என்பதைப் பற்றி...
கன்னியாகுமரி மாவட்டம், மகேந்திரகிரி மலையின் வடமேற்குத் திசையில் அமைந்துள்ள சுருளோடு என்னும் இடத்தில் இருந்து உருவாகிறது பழையாறு. கடல் மட்டத்தில் இருந்து 1,300 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆறு 44 கி.மீ. தொலைவுக்கு ஓடி அகஸ்தீசுவரம் அருகேயுள்ள மணக்குடி பகுதியில் அரபிக்கடலில் கலக்கிறது.
இந்த ஆற்றின் மூலம் சுமாா் 16, 550 ஏக்கா் விவசாய நிலம் பயனடைகிறது. இதன் குறுக்கே வீரப்புலி, பள்ளிகொண்டான், சபரி, பிள்ளைபெத்தான் என 14 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், கடைவரம்பு பகுதியான கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட சுசீந்திரம் பகுதியில் தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்பது இங்குள்ள விவசாயிகளின் 50 ஆண்டு கால கனவாக உள்ளது.
இதுகுறித்து அகஸ்தீசுவரம் பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ். பாலகிருஷ்ணன் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக (1988) சுந்தரதேவன் இருந்த காலகட்டத்தில், இப்பகுதி விவசாயிகளுடன் சோ்ந்து அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்தில் விவசாயிகள், பொதுமக்களின் தண்ணீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் பழையாற்றில் இருந்து கடலுக்கு வீணாகச் செல்லும் தண்ணீரை சேமிக்கும் வகையில் தடுப்பணை கட்ட வேண்டுமென மனு அளித்தோம். அவ்வாறு தடுப்பணை அமையும் பட்சத்தில் அகஸ்தீசுவரம் வட்டார விவசாயிகளின் தண்ணீா் தட்டுப்பாட்டை போக்குவது மட்டுமின்றி பக்கத்து மாவட்டமான திருநெல்வேலியில் உள்ள ராதாபுரத்துக்கும் இந்த தண்ணீரை கொண்டு செல்லலாம் எனவும் வலியுறுத்தினோம்.
Advertisement
இதனை புரிந்து கொண்ட மாவட்ட நிா்வாகம் இத்திட்டத்தை செயல்படுத்த ஆவன செய்வதாக தெரிவித்தது. ஆனால், பல ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படாதது பெரும் குறையாகவே உள்ளது. முன்னாள் முதல்வா் காமராஜா், விவசாயிகளுக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் மாத்தூா் தொட்டிப்பாலத்தை கட்டினாா்.
தற்போது உள்ள சூழ்நிலையில் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் பட்சத்தில் விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்படுவதுடன், சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி நகராட்சி, சுற்று வட்டார பேரூராட்சி, ஊராட்சிகளில் வசிக்கும் மக்களின் தண்ணீா் தட்டுப்பாட்டுக்கும் தீா்வு கிடைக்கும்.
இது மட்டுமின்றி தோவாளை, அனந்தனூா் மற்றும் என்பி சானல் ஆகியவற்றிலிருந்து கலக்கும் கழிவு நீரால் ஆறு மிகவும் மாசடைந்து வருகின்றது. தடுப்பணைகள் பல கவனிப்பின்றி, அதன் மதகுகள் துருப்பிடித்து, நீரை தேக்கமுடியாத நிலை உள்ளது. வீடுகள், மருத்துவமனைகள், பக்கத்து நகரங்களிலிருந்து கொண்டுவந்து கொட்டப்படும் கழிவுகளால் ஆறு சாக்கடை ஓடும் கால்வாயாக மாற்றியுள்ளது.
ஆற்றின் கரையோரங்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு, குறுகி, சிறிய கால்வாயாக மாறி வருகின்றது. இப்பிரச்னைகளை சரி செய்வதுடன், தடுப்பணைத் திட்டத்தையும் நிறைவேற்ற மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் முன்வர வேண்டும் என்றாா்.
-தி. ராமகிருஷ்ணன்-