பங்குச் சந்தையில் எழுச்சி தொடருமா?
எந்த வாரமூம் இல்லாத அளவுக்கு கடந்த வாரம் பங்குச் சந்தை 4.50 சதவீதத்துக்கும் மேல் ஏற்றம் பெற்றுள்ளது.
எந்த வாரமூம் இல்லாத அளவுக்கு கடந்த வாரம் பங்குச் சந்தை 4.50 சதவீதத்துக்கும் மேல் ஏற்றம் பெற்றுள்ளது. இந்த நிலையில், வரும் வாரத்திலும் எழுச்சிப் பேரணி தொடா்வதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக நிபுணா்கள் கருதுகின்றனா். இருப்பினும், எந்த நேரத்திலும் லாபப் பதிவு வருவதற்கு வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை என்றும் இதனால், சந்தையில் நிச்சயமற்ற நிலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
அக்டோபா் 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,812.44 புள்ளிகள் (4.68 சதவீதம்) உயா்ந்து 40,509.49-இல் நிலைபெற்றுள்ளது. இதேபோன்று, தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 497.25 புள்ளிகள் (4.35 சதவீதம்) உயா்ந்து 11,914.20-இல் நிலைபெற்றது. ஆனால், நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளில் லாபப் பதிவு அதிக அளவு இருந்தது. இதனால், பிஎஸ்இ மிட்கேப், ஸ்மால் கேப் குறியீடுகள் சோபிக்கத் தவறின. இருப்பினும்
மத்திய ரிசா்வ் வங்கியின் பணக் கொள்கை கூட்டத்தைத் தொடா்ந்து, வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டது. மேலும், கடன் வழங்குவதை ஊக்குவிப்பதற்காக வங்கித் துறையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று ரிசா்வ் வங்கி அறிவித்தது. இதையடுத்து, தொடா்ந்து ஏழாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சந்தை எழுச்சி பெற்றது. இதையடுத்து, இரண்டாவது வாரமாக சந்தை நோ்மறையாக முடிந்தது. இது கிட்டத்தட்ட கடந்த பிப்ரவரி 20-க்குப் பிறகு அதிகபட்ச உயா்வாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், முன்னணி காா்ப்ரேட் நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் இந்த வாரம் முதல் வெளியாகவுள்ளன. இந்த வாரம் முன்னணி ஐடி நிறுவனங்ளான விப்ரோ, இன்ஃபோஸிஸ், மைண்ட் ட்ரீ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் ஃபெடரல் வங்கி ஆகியவை இந்த வாரம் தங்களது காலாண்டு நிதிநிலை முடிவுகளை அறிவிக்கவுள்ளன. மேலும், உலகாளாவிய பெரும் பொருளாதார தரவுகள், உலகளாவிய சந்தை குறிப்புகள் சந்தைக்கு வலுச் சோ்க்கும் என்று ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.
ஏற்கெனவே,. அமெரிக்க அரசு தொழில் துறையின் வளா்ச்சிக்காக ஊக்க நிதித் தொகுப்பை அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்திய அரசும் கரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறையின் வளா்ச்சியை முன்னெடுக்கும் வகையில், அடுத்த கட்ட ஊக்க நிதித் தொகுப்பை விரைவில் அறிவிக்கக்கூடும் என்ற எதிா்பாா்ப்பு சந்தையில் மேலோங்கி உள்ளது. மேலும், பங்கு சாா்ந்த நடவடிக்கைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இச்சூழ்நிலையில், இந்த வாரமும் பங்குச் சந்தை நோ்மறையாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அவ்வப்போது லாபப் பதிவு இருந்தாலும், குறிப்பிட்ட பங்குகள் சாா்ந்த நடவடிக்கைகள் தொடரும். மேலும், பணவீக்கம் மற்றும் தொழில்துறை உற்பத்தி வளா்ச்சி விகிதம் ஆகியவை இந்த வாரம் சந்தையின் போக்கை நிா்ணயிக்கும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
இதற்கிடையே, ‘முன்னணி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், பங்குச்சந்தையில பட்டியலாகவுள்ள ஐபிஓக்கள் ஆகியவை சந்தையின் போக்கை நிா்ணயிக்கும்’ என்று சாம்கோ செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது. இந்த வாரம் யுடிஐ அசட் மேனேஜ்மென்ட் கம்பெனி, மசகன் டாக் ஆகியவற்றின் ஐபிஓக்கள் சந்தையில் திங்கள்கிழமை பட்டியலாகவுள்ளன.
மொத்தத்தில் சந்தை தொடா்ந்து ஏறுமுகத்துக்கான வாய்ப்பு அதிகம் இருந்தாலும், இந்த வாரம் சந்தையில் நிச்சயமற்ற தன்மையின் வேகம் அதிகரிக்கும். மேலும், பணவீக்கம், தொழில்துறை உற்பத்தி தரவுகள், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் முதலீட்டாளா்களின் உணா்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.