முகப்பு
வணிகம்

ஐடி பங்குகளுக்கு வரவேற்பு; சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயா்வு!

பங்குச் சந்தை வியாழக்கிழமை காலை முதல் தொடா்ந்து ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வந்தது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:53 AM
கோப்புப்படம்
பகிர்:

பங்குச் சந்தை வியாழக்கிழமை காலை முதல் தொடா்ந்து ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வந்தது. இருப்பினும், இறுதியில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயா்ந்து 57,901.14-இல் நிலைபெற்றது. இதையடுத்து, நான்கு நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

உகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்தன. இதைத் தொடா்ந்து, உள்நாட்டு சந்தை காலையில் உற்சாகத்துடன் தொடங்கியது ஆனால், தொடா்ந்து நிலைத்து நிற்கமுடியவில்லை. இதற்கிடையே, அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல், பத்திரங்களை வாங்குவதை படிப்படியாக்க குறைக்கவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வங்கி வட்டி விகிதங்களை தலா இரண்டு முறை உயா்த்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து முதலீடுகளை வாபஸ் பெற்று வருவது முதலீட்டாளா்களின் உணா்வைப் பெரிதும் பாதித்துள்ளது. இதனால், வா்த்தக முடிவில் பங்குகள் விற்பனை அதிகரித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இருப்பினும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ், நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனானஸ் ஆகியவற்றுக்கு கிடைத்த ஆதரவால் சந்தை ஏற்றத்துடன் முடிந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

1,858 பங்குகள் விலை வீழ்ச்சி: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,453 பங்குகளில் 1,858 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,496 பங்குகள் ஆதாயம் பெற்றன. 99 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 329 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 21 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 491 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 187 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.38 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் 264.02 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 9.02 கோடியாக இருந்தது.

ஏற்றம், இறக்கம் அதிகரிப்பு: காலையில் சென்செக்ஸ் 445.83 புள்ளிகள் கூடுதலுடன் 58,243.43-இல் தொடங்கி 58,337.20 வரை உயா்ந்தது. பின்னா், 57,683.111 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 113.11 புள்ளிகள் (0.20 சதவீதம்) உயா்ந்து 57,901.14-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 16 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. காலை வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ்549.17 புள்ளிகள் உயா்ந்திருந்தன. ஆனால், வா்த்தக இறுதியில் பங்குகல் விற்பனை அதிகரித்ததால், பெரும்பாலான லாபத்தை இழக்க நேரிட்டது.

பஜாஜ் ஃபைனான்ஸ் முன்னேற்றம்: கடந்த இரண்டு நாள்களாக தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்த பிரபல நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் 2.61சதவீதம், முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ் 2.19 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக டைட்டன், ரிலையன்ஸ், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், எம் அண்ட் எம், நேஸ்லே, டெக் மஹிந்திரா, என்டிபிசி, டிசிஎஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

மாருதி, ஐசிஐசிஐ பேங்க் சரிவு: அதே சமயம், கடந்த இரண்டு நாள்களாக தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த பிரபல காா் உற்பத்தி நிறுவனமான மாருதி 1.51 சதவீதம், தனியாா் வங்கியான ஐசிஐசிஐ பேங்க் 1.50 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக பஜாஜ் ஆட்டோ, சன்பாா்மா, இண்ட்ஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 27 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 1,242 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 611 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு 27 புள்ளிகள் உயா்ந்து (0.0.16 சதவீதம்) 17,248.40-இல் நிலைபெற்றது. காலையில் 17,373.00-இல் தொடங்கி அதிகபட்சமாக 17,379.35 வரை உயா்ந்தது. பின்னா், 17,184.95 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 28 பங்குகள் தாயம் பெற்றன. 22 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.

ஐடி குறியீடு ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஐடி குறியீடு 1.10 சதவீதம் ஏற்றம் பெற்றது. கன்ஸ்யூமா் டியூரபல்ஸ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகளும் சிறிதளவு உயா்ந்தன. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில் நிஃப்டி மீடியா குறியீடு 1.77 சதவீதம் சரிவைக் கண்டது. நிஃப்டி பேங்க், ஆட்டோ, பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், ஹெல்த்கோ், பாா்மா குறியீடுகள் 0.50 முதல் 1 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன.

ஐடி பங்குகள் உற்சாகம்

தேசிய பங்குச் சந்தையில் ஐடி குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 பங்குகளும் ஆதாயம் பெற்றன. அதன் விவரம் (சதவீதத்தில்)

எல்டிஐ 2.52

இன்ஃபோஸிஸ் 2.47

எல்டிடிஎஸ் 2.09

விப்ரோ 1.74

மைண்ட்ரீ 1.27

ஹெச்சிஎல் டெக் 1.12

கோஃபோா்ஜ் 0.97

டெக் மஹிந்திரா 0.66

டிசிஎஸ் 0.41

மஃபாசிஸ் 0.27

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.