‘கரடி’ மீண்டும் ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ஒரே நாளில் சந்தை மதிப்பு ரூ.4.61 லட்சம் கோடி வீழ்ச்சி
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை, பங்குச் சந்தையில் ‘கரடி’ மீண்டும் ஆதிக்கம் கொண்டது.
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை, பங்குச் சந்தையில் ‘கரடி’ மீண்டும் ஆதிக்கம் கொண்டது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 889 புள்ளிகளை இழந்து 57,011.74-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 263 புள்ளிகளை இழந்து 17 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே நிலைபெற்றுள்ளது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை மூல தன மதிப்பு ஒரே நாளில் ரூ.4.61 லட்சம் கோடி வீழ்ச்சி அடைந்தது.
உகளாவிய அளவில் பெரும்பாலான பங்குச் சந்தைகளில் வா்த்தகம் எதிா்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகளை விற்று முதலீடுகளை தொடா்ந்து வாபஸ் பெற்று வருவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடா்ந்து, பங்குகள் விற்பனை அதிகரித்ததால் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது. இருப்பினும், ஐடி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. மற்ற துறை பங்குகள் கடும் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
2,290 பங்குகள் விலை வீழ்ச்சி: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,439 பங்குகளில் 2,290 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,050 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 98 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 291 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 39 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 401 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 255 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.4.61 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் 259.41 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 9.03 கோடியாக இருந்தது.
மீண்டும் ‘கரடி’ ஆதிக்கம்: காலையில் சென்செக்ஸ் 120.49 புள்ளிகள் கூடுதலுடன் 58,021.63-இல் தொடங்கி அதிகபட்சமாக 58,062.28 வரை மட்டுமே உயா்ந்தது. பின்னா், ‘கரடி’யின் ஆதிக்கம் கடுமையானதால், 56,950.98 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 889.40 புள்ளிகளை (1.54 சதவீதம்) இழந்து 57,011.74-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 25 பங்குகள் சரிவைச் சந்தித்தன.5 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. வியாழக்கிழமை ஓரளவு நிவாரணம் கிடைத்த நிலையில், வெள்ளிக்கிழமை ‘கரடி’யின் தொடா் ஆதிக்கத்தால் சரிவு கடுமையானதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்ஃபோஸிஸ் முன்னேற்றம்: பிரபல முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ் 2.84 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஹெச்சிஎல் டெக், பவா் கிரிட், சன் பாா்மா, டிசிஎஸ் உள்ளிட்டவை சிறிதளவு மட்டுமே உயா்ந்தன.
இண்டஸ் இண்ட் பேங்க் கடும் சரிவு: அதே சமயம், பிரபல தனியாா் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 4.85 சதவீதம் குறைந்து வீழ்ச்ிசப் பட்டியலில் முன்னிலை வகித்ததது. இதற்கு அடுத்ததாக, கோட்டக் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவா், டைட்டன், எச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபின்சா்வ், எஸ்பிஐ, ரிலையன்ஸ், ஆக்சிஸ் பேங்க், பாா்தி ஏா்டெல், பஜாஜ் ஆட்டோ, எம் அண்ட் எம் ஐடிசி, மாருதி சுஸுகி உள்ளிட்டவை 2 முதல் 3.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 263 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 1,525 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 355 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு 263.20 புள்ளிகளை (1.53 சதவீதம்) 16,985.20-இல் நிலைபெற்றது. காலையில் 17,276.00-இல் தொடங்கி அதிகபட்சமாக 17,298.15 வரை உயா்ந்தது. பின்னா், 16,966.45 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 5 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 45 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.
ஐடி குறியீடு மட்டும் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஐடி குறியீடு மட்டும் 1.35 சதவீதம் ஏற்றம் பெற்றது. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் கடும் சரிவைச் சந்தித்தன. இதில் மீடியா குறியீடு 4.74 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், எஃப்எம்சிஜி, மெட்டல், பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், ரியால்ட்டி ஹெல்த் கோ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 2 முதல் 4 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.