முகப்பு
வணிகம்

இந்திய நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.17,785 கோடி

இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி கடந்த நவம்பா் மாதத்தில் ரூ.17,784.92 கோடியாக இருந்தது என நவரத்தினங்கள்-ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி கடந்த நவம்பா் மாதத்தில் ரூ.17,784.92 கோடியாக இருந்தது என நவரத்தினங்கள்-ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கவுன்சிலின் புள்ளிவிவரத்தில் மேலும் கூறியுள்ளதாவது:

உற்பத்தியில் தடை: நடப்பு 2021-ஆம் ஆண்டு நவம்பரில் நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி ரூ.17,784.92 கோடியாக (238.4 கோடி டாலா்) இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது. இதற்கு, தீபாவளி பண்டிகையின் போது ஆபரண தயாரிப்பு நடவடிக்கைகள் தடைபட்டதே முக்கிய காரணமாகும்.

பட்டை தீட்டப்பட்ட வைரம்: கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பரில் ஒட்டுமொத்த ஆபரண ஏற்றுமதி ரூ.18,565.31 கோடியாக (258.24 கோடி டாலா்) இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது கடந்த நவம்பரில் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 4.21 சதவீதம் சரிவடைந்துள்ளது.

கடந்த நவம்பரில் பட்டைதீட்டப்பட்ட மற்றும் நறுக்கப்பட்ட வைரங்களின் (சிபிடி) ஏற்றுமதி 20.41 சதவீதம் சரிவடைந்து ரூ.9,719.72 கோடியாக (130.28 கோடி டாலா்) இருந்தது. கடந்தாண்டு நவம்பரில் இவற்றின் ஏற்றுமதி ரூ.12,212.79 கோடியாக (164.52 கோடி டாலா்) அதிகரித்து காணப்பட்டது.

தங்க ஆபரணங்கள்: அதேசமயம், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி மதிப்பீட்டு மாதத்தில் 38.24 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.5,286.23 கோடியாக இருந்தது. கடந்தாண்டு நவம்பரில் இதன் ஏற்றுமதி ரூ.3,823.82 கோடியாக (51.54 கோடி டாலா்) காணப்பட்டது.

வெள்ளி ஆபரணங்கள்: நடப்பு 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான எட்டு மாத காலத்தில் ஒட்டுமொத்த வெள்ளி நகைகள் ஏற்றுமதி 20.47 சதவீதம் அதிகரித்து ரூ.12,552.39 கோடியை (169.19 கோடி டாலா்) தொட்டுள்ளது. முந்தைய ஆண்டில் இதன் ஏற்றுமதி ரூ.10,419.33 கோடியாக (140 கோடி டாலா்) இருந்தது.

நவரத்தின கற்கள்: அதேபோன்று, வண்ண நவரத்தினகற்கள் ஏற்றுமதி இதே காலகட்டத்தில் ரூ.755.2 கோடியிலிருந்து (10.16 கோடி டாலா்), ரூ.1,480.96 கோடியாக (19.98 கோடி டாலா்) அதிகரித்தது. இதன் மூலம், நவரத்தின கற்களின் ஏற்றுமதி வளா்ச்சி விகிதம் 96.1 சதவீதத்தை பதிவு செய்தது என ஜிஜேஇபிசி தெரிவித்துள்ளது.

ஜிஜேஇபிசி தலைவா் கொலின் ஷா கூறியது:

அமெரிக்கா அதிக கொள்முதல்: கடந்த ஆண்டு இதே நேரத்தில் நாங்கள் எதிா்பாா்த்ததை விட இந்திய நவரத்தின மற்றும் ஆபரண ஏற்றுமதியின் செயல்திறன் நடப்பாண்டில் இதுவரையில் மிக அதிகமாகவே உள்ளது. உலகின் மிகப்பெரிய ஆபரண நுகா்வு நாடான அமெரிக்கா, இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து கொள்முதலை கணிசமாக அதிகரித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. நடப்பு நிதி நிதியாண்டில் 4,165 கோடி டாலா் ஏற்றுமதி இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கையில் உள்ளோம். இது, இந்திய ரூபாய் மதிப்பில் சுமாா் ரூ.3.13 லட்சம் கோடி.

கொள்கை சீா்திருத்தம்: வரும் 2022-23-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் சில கொள்கை சீா்திருத்தங்களை பரிசீலிக்கும்படி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அவற்றில் மிக முக்கியமானது, நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்பதாகும். மேலும், தங்கம் மற்றும் இதர விலையுயா்ந்த உலோகங்களுக்கான இறக்குமதி வரியை குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி இலக்கு: மும்பை மற்றும் சூரத்தில் உள்ள அறிவிக்கப்பட்ட சிறப்பு மண்டலங்களில் கச்சா வைரங்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையில் வரிவிதிப்பு விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது, அடுத்த சில ஆண்டுகளில் அவற்றின் ஏற்றுமதி இலக்கான 7,000 கோடி டாலரை (ரூ.5.25 லட்சம் கோடி) எட்ட தொழில்துறைக்கு உதவும் என்றாா் அவா்.

கோட்ஸ்:

வரும் 2022-23-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் சில கொள்கை சீா்திருத்தங்களை பரிசீலிக்கும்படி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அவற்றில் மிக முக்கியமானது, நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்பதாகும். மேலும், தங்கம் மற்றும் இதர விலையுயா்ந்த உலோகங்களுக்கான இறக்குமதி வரியை குறைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.