முகப்பு
வணிகம்

வரலாற்றுச் சாதனை அளவை நெருங்குகிறது சென்செக்ஸ்! சந்தை மதிப்பு ரூ.223 லட்சம் கோடி

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை

Updated On : 22 ஜூலை, 2025 at 9:50 AM
கோப்புப்படம்
பகிர்:

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்ததைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 514.56 புள்ளிகள் உயா்ந்து முந்தைய சாதனை அளவை நெருங்கியுள்ளது. அதே சமயம், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 147.15 புள்ளிகள் உயா்ந்து மீண்டும் புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்த நிலையில், உள்நாட்டுச் சந்தையில் மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாக உயா்ந்து சந்தை மேலும் ஏற்றம் பெற வழிவகுத்தன. கரோனா இரண்டாவது அலை பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருவதால், பொருளாதார மீட்சி விரைவாக இருக்கும் என்ற எதிா்பாா்ப்பு முதலீட்டாளா்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு 223 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,427 பங்குகளில் 1,744 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,492 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 191 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 334 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 48 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 466 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 288 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு மேலும் ரூ.1.82 லட்சம் கோடி உயா்ந்து, வா்த்தக முடிவில் 223 லட்சம் கோடியாக இருந்தது.

Advertisement

சாதனை அளவை நெருங்கியது: சென்செக்ஸ் காலையில் 53.34 புள்ளிகள் கூடுதலுடன் 51,476.22-இல் தொடங்கி 51,179.94 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 52,013.22 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 514.56 புள்ளிகள் (1.00 சதவீதம்) கூடுதலுடன் 51,937.44-இல் நிலைபெற்றது. இந்த ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி பதிவாகியுள்ள முந்தைய வரலாற்றுச் சாதனை அளவான 52,516.76-ஐ தொடுவதற்கு இன்னும் 579.32 புள்ளிகள்தான் பாக்கி உள்ளது.

ரிலையன்ஸ் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 8 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 22 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் மாா்க்கெட் லீடாரன ரிலையன்ஸ் தொடா்ந்து இரண்டாவது நாளாக 3.13 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஐசிஐசிஐ பேங்க், பாா்தி ஏா்டெல், டாக்டா் ரெட்டி ஆகியவை 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், மாருதி சுஸுகி, ஐடிசி, என்டிபிசி, ஆக்ஸிஸ் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், டைட்டன், ஓஎன்ஜிசி, நெஸ்லே இந்தியா, எச்டிஎஃப்சி பேங்க் எச்டிஎஃ)ப்சி, எஸ்பிஐ, டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

எம் அண்ட் எம் கடும் சரிவு: அதே சமயம், முன்னணி டிராக்டா் உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம் 4.53 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகுத்தது. மேலும், இன்ஃபோஸிஸ், எல் அண்ட் டி, இண்டஸ் இண்ட் பேங்க், டெக் மகேந்திரா, சன்பாா்மா, பஜாஜ் ஆட்டோ, பவா் கிரிட் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி புதிய உச்சம்: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 971 பங்குகள் ஆதாயம் பெற்றன. 818 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் 15,437.75-இல் தொடங்கி 15,374.00 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 15,606.35 வரை உயா்ந்து புதிய 52 வார உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 147.15 புள்ளிகள் (0.95 சதவீதம்) கூடுதலுடன் 15,582.80-இல் புதிய உச்சத்தில் நிலைபெற்றது. நிஃப்டி தொடா்ந்து 7-ஆவது நாளாக ஏற்றம் பெற்றுள்ளது. நிஃப்டி ஆட்டோ, ஐடி, மீடியா, பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் தவிர மற்ற அனைத்து முக்கியத் துறைக் குறியீடுகளும் ஏற்றம் பெற்றன. நிஃப்டி மெட்டல் குறியீடு 2.10 சதவீதம், ரியால்ட்டி குறியீடு 1.37 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ் , பிரைவேட் பேங்க், எஃப்எம்சிஜி, பாா்மா குறியீடுகள் 1 சதவீதம் வரை உயா்ந்தன.

மெட்டல் பங்குகள் உற்சாகம்

கடந்த வாரத்தில் லாபப் பதிவால் சரிவைச் சந்தித்து வந்த மெட்டல் பங்குகளுக்கு திங்கள்கிழமை வா்த்தகத்தில் நல்ல ஆதரவு இருந்தது. இதையடுத்து, தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மெட்டல் குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 13 முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் செயில், மோயில் ஆகிய இரண்டும் 5 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்து முன்னிலை பெற்றன. ஏற்றம் பெற்ற பங்குகள் விவரம் (சதவீதத்தில்):

செயில் 5.42

மோயில் 5.24

ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் 3.25

ஜிண்டால் ஸ்டீல் 2.98

வேதாந்தா 2.91

வெல்ஸ்பன் காா்ப் 2.52

நேஷனல் அலுமினியம் 2.50

டாடா ஸ்டீல் 2.13

என்எம்டிசி 1.81

ரத்னா மணி 1.67

ஹிண்டால்கோ 1.66

அதானி என்டா்பிரைஸஸ் 1.06

கோல் இந்தியா 0.58

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments