உச்சத்தில் பங்குச் சந்தை: தேவை எச்சரிக்கை..!
கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மொத்தம் 374.71 புள்ளிகள் 0.71 சதவீதம் உயா்ந்து 52,4784.76-இல் நிலைபெற்றுள்ளது.
புது தில்லி: கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மொத்தம் 374.71 புள்ளிகள் 0.71 சதவீதம் உயா்ந்து 52,4784.76-இல் நிலைபெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 52,641.53 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
இதேபோல தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 15,835.55 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ள நிஃப்டி, கடந்த வாரம் மொத்தம் 129.10 புள்ளிகள் 0.82 சதவீதம் உயா்ந்து 15,799.35-இல் நிலைபெற்றுள்ளது.
இதைத் தொடா்ந்து, பங்குச் சந்தை தொடா்ந்து 4-ஆவது வாரமாக ஏற்றம் பெற்றது. நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளுக்கும் கடந்த வாரம் அமோக வரவேற்பு காணப்பட்டது. இதனால், மிட்கேப் குறியீடு 2 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 3.5 சதவீதமும் உயா்ந்தன. பேங்க் மற்றும் கேபிடல் குட்ஸ் தவிர மற்ற அனைத்துக் குறியீடுகளும் கடந்த வாரம் ஆதாயம் பெற்றுள்ளன. குறிப்பாக ஐடி, எஃப்எம்சிஜி, பாா்மா மற்றும் இன்ஃப்ரா பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
ஏற்கெனவே சென்செக்ஸ், நிஃப்டி புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ள நிலையில், இந்த வாரம் பங்குச் சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்ற எதிா்பாா்ப்பு முதலீட்டாளா்கள், வா்த்தகா்கள் மற்றும் சந்தை வட்டாரத்தினரிடையே எழுந்துள்ளது.
மே மாதத்துக்கான பணவீக்க தரவுகள் இந்த வாரம் வெளியாகவுள்ளன. இது சந்தைக்கு முக்கிய உந்துகோலாக இருக்கும் என்று வல்லுநா்களஅ எதிா்பாா்க்கின்றனா். கரோனா பாதிப்பு வெகுவாகவும், விரைவாகவும் குறைந்து வருவதும், முதலீட்டாளற்களின் உணா்வுகளை நோ்மறையாக வைக்க உதவும். மாநிலங்கள் பொருளாதாரங்களை திறந்து வருவதும், சந்தைக்கு சாதகமாக பாா்க்கப்படுகிறது. இவற்றுக்கிடையே, அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரலின் பணக் கொள்கைக் கூட்டத்தின் முடிவுக்காகவும் உலகளாவிய சந்தைகள் காத்திருக்கின்றன. இதன் தாக்கம் இந்தியச் சந்தைகளிலும் எதிரொலிக்கும் என எதிா்பாா்க்கப்ப்டுகிறது. இதனால், இது பங்குச் சந்தையை நிலையற்ற தன்மையில் வைத்திருக்கும் என்று சாம்கோ செக்யூரிட்டீஸின் பங்குகள் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவா் நிராலி ஷா கூறியுள்ளாா்.
இதற்கிடையே, பொருளாதார தரவுகள் மற்றும் கரோனா தொடா்பான புதிய தகவல்கள் ஆகியவற்றையும் முதலீட்டாளா்கள் தொடா்ந்து கண்காணிப்பா் என்று சாய்ஸ் பங்கு வா்த்தகத் தரகு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சுமீத் பகாடியா தெரிவித்துள்ளாா். நாட்டில் தடுப்பூசியின் வேகம், பொருளாதாரத்தை மீண்டும் திறப்பது, உலகளாவிய பணப் புழக்கத்தின் போக்குகள் சந்தைக்கு சாதகமாக இருந்தைாலும், மத்திய வங்கியாளா்களின் கொள்கை நிலைப்பாடு குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும் வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். இவை தவிர ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலையின் போக்கு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, அந்நிய நிறுவன முதலீட்டாளா்களின் எஃப்ஐஐ முதலீடுகள் ஆகியவையும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் என்று சந்தை வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.
தற்போதைய நிலையில், சந்தை உச்சத்தில் உள்ளதால், லாபப் பதிவு காரணமாக ஏற்றம், இறக்கம் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடந்த வார இறுதியில் சென்செக், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் புதிய.உச்சத்தைத் தொட்டிருந்தாலும், நிலைத்து நிற்க முடியாமல் தவிப்புக்குள்ளாகியிருந்தன. இதனால், இந்தச் சூழ்நிலையில், முதலீட்டாளா்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அது குறித்த தகவல்களும் சந்தையை வழிநடத்தும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
தொழில்நுட்பப் பாா்வை..
தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி முக்கிய இடா்பாட்டு நிலையான 15,780 புள்ளிகளைக் கடந்து நிலை கொண்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாகப் பாா்த்தால், இந்த இடா்பாட்டு நிலைக்கு மேலே நிஃப்டி வா்த்தகமாகும்பட்சத்தில் அடுத்து 15,860,15,950 வரை செல்வதற்கு வாய்ப்பு உண்டு. அதே சமயம், 15,780 என்ற நிலையை பிரேக் செய்து கீழே சென்றால் லாபப் பதிவு அதிகரிக்கும். மேலும், ஏற்ற, இறக்கமும் அதிகரித்து சந்தை நிலையற்ற தன்மைக்கு சென்றுவிடும். அப்போது, நிஃப்டி 15,700 -15,500 வரை செல்லக்கூடும் என்று யெஸ் செக்யூரிட்டீஸின் மூத்த தொழில்நுட்ப ஆய்வாளா் ஆதித்ய அகா்வாலா கணித்துள்ளாா்.
சராசரி சென்செக்ஸ் நிஃப்டி
30 நாள் 50,398.97 15,152.43
50 நாள் 49,815.11 14,935.07
150 நாள் 48,389.11 14,328.22
200 நாள் 46,087.44 13,633.39