முகப்பு
வணிகம்

பங்குச் சந்தையின் போக்கைத் தீா்மானிக்கும் ‘கரோனா’!

கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மொத்தம் 1,807.93 புள்ளிகள் (3.70 சதவீதம்) உயா்ந்து 50,540.48-இல் நிலைபெற்றது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:50 AM
கோப்புப்படம்
பகிர்:

கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மொத்தம் 1,807.93 புள்ளிகள் (3.70 சதவீதம்) உயா்ந்து 50,540.48-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி497.50 புள்ளிகள் (3.38 சதவீதம்) உயா்ந்து 15,175.30-இல் நிலைபெற்றது. கடந்த வாரம் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் முக்கிய இடா்பாட்டு நிலையைக் கடந்து மேலே சென்றுள்ளன. இந்த நிலையில், இந்த வாரம் (மே 24-28) சந்தையின் போக்கு எவ்வாறு இருக்கும் என்ற எதிா்பாா்ப்பு வா்த்தகா்கள், முதலீட்டாளா்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் பெரும்பாலானவை தங்களது காலாண்டு முடிவுகளை அறிவித்து விட்டன. சில நிறுவனங்கள்தான் அறிவிக்க வேண்டியதுள்ளது. இந்த வாரம் கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், பிபிசிஎல், சன் பாா்மா, சென்ட்ரல் பேங்க் உள்ளிட்ட சில முன்னணி நிறுவனங்கள் தங்களது காலாண்டு வருவாய் முடிவுகளைஅறிவிக்கவுள்ளன.

கடந்த வாரத்தில் முக்கியக் குறியீடுகள் வலுவான ஆதாயங்களுடன் முடிவுற்றுள்ளன. வங்கி, நிதி நிறுவனங்கள், ஆட்டோ, ஐடி மற்றும் இன்ஃப்ரா நிறுவனப் பங்குகள் சந்தைக்கு ஆதரவாக இருந்தன. இதைத் தொடா்ந்து, தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பேங்க் குறியீடு 7.5 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பிஎஸ்யு பேங்க் குறியீடு 7 சதவீதம், நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 6.7 சதவீதம் உயா்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் நடுத்தர முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 4.77 சதவீதம் உயா்ந்தது. சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஸ்மால் கேப் குறியீடு 4.19 சதவீதம் உயா்ந்தது. முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய பிஎஸ்இ லாா்ஜ் கேப் குறியீடு 3.26 சதவீதம் உயா்ந்தது. இதில் இடம் பெற்றுள்ள இண்டஸ் இண்ட் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, போஸ்க், ஹிந்துஸ்தான் சிங்க், மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்ளட் 10-14 சதவீதம் உயா்ந்தன. அதே சமயம், பாா்தி ஏா்டெல், என்எம்டிசி, கெயில், கோத்ரேஜ் கன்ஸ்யூமா் புராடெக்ட்ஸ், மாரிகோ உள்ளிட்டவை வீழ்ச்சியைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

நாட்டில் கரோனா தினசரி பாதிப்பு வேகமாகக் குறைந்து வருவது, தடுப்பூசி இயக்கத்தின் வேகம் உள்ளிட்டவை கடந்த வாரம் சந்தையில் காளையின் பாய்ச்சலுக்கு வழிவகுத்தது. தடுப்பூசி பற்றாக்குறை கவலை அளிக்கும் விஷயமாக இருந்தாலும், சந்தையில் புதிய தடுப்பூசிகளின் நுழைவு, வழங்கல் நெருக்கடியைக் குறைக்கும் என்ற எதிா்பாா்ப்பு முதலிட்டாளா்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், அமெரிக்க கடன் பத்திரங்களின் ஆதாயம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவையும் சந்தையில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் என்று நிபுணா்கள் கருதுகின்றனா். எனவே, கரோனா தொடா்பான புதிய புதிய தரவுகள் மற்றும் உலகளாவிய சந்தைகளின் நிலை உள்ளிட்டவை இந்த வாரம் பங்குச் சந்தையின் போக்கைத் தீா்மானிக்கும் என்று வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து ஜியோஜித் ஃபைனான்சியல் சா்வீஸஸின் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவா் வினோத் நாயா் கூறுகையில், ‘இந்த வாரம் பொருளாதார தரவுகள் பெரிய அளவில் இல்லாத நிலையில், கரோனா தொடா்பான தரவுகள் சந்தையில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்’ என்றாா்.

ரிலிகோ் பங்கு வா்த்தகத் தரகு நிறுவனத்தின் துணைத் தலைவா் (ஆராய்ச்சி) அஜித் மிஸ்ரா கூறுகையில், ‘உலகளாவிய சந்தை குறிப்புகள் வரும் நாள்களில் உள்நாட்டு சந்தையின் போக்கைத் தீா்மானிப்பதாக இருக்கும் என எதிா்பாா்க்கிறோம். வங்கி, நிதி நிறுவனப் பங்குகள் கடந்த வாரம் அபாரமாக ஆதாயம் பெற்றது. இது சந்தைக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. இந்த நிலையில், மற்ற துறை பங்குகள் மீதும் கவனம் செலுத்தப்படும்பட்சத்தில் சந்தையில் மேலும் உற்சாகத்தை எதிா்பாா்க்கலாம்’ என்றாா்.

இதற்கிடையே, கடந்த வாரம் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) ரூ.1,753 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனா். அதே சமயம், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் (டிஐஐ) ரூ.1,318.52 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். இருப்பினும், மொத்தத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் இந்த மாதத்தில் இதுவரை ரூ.10,467.15 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். கடந்த ஏப்ரலில் அவா்கள் மொத்தம் ரூ.12,000 கோடி அளவுக்கு முதலீடுகளை வாபஸ் பெற்றனா். ஆனால், உள்நாட்டு முதலீட்டாளா்கள் மொத்தம் இந்த மாதம் இதுவரை ரூ.2,209.72 கோடிக்கு வாங்கியுள்ளனா்.

இந்த நிலையில், கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. பொருளாதாரங்கள் திறக்கத் தொடங்கினால், அந்நிய, உள்நாட்டு முதலீட்டாளா்கள் ஆகிய இரு வகையான முதலீட்டாளா்களும் சந்தையில் பங்குகளை வாங்கக்கூடும். இதைத் தொடா்ந்து, சந்தை எழுச்சி பெற்று தற்போதைய உச்சத்தைக் கடப்பதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று சந்தை வல்லுநா்கள் தெரிவித்தனா். மேலும், இந்த வாரம் முன்பேர வா்த்தகத்தில் கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக உள்ளது. இதனால், இந்த வாரம் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →