நாட்டின் ஏற்றுமதி ரூ.2.66 லட்சம் கோடி
நாட்டின் ஏற்றுமதி கடந்த அக்டோபா் மாதத்தில் ரூ.2.66 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
நாட்டின் ஏற்றுமதி கடந்த அக்டோபா் மாதத்தில் ரூ.2.66 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தற்காலிக புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
பெட்ரோலியம்: நாட்டின் ஏற்றுமதி கடந்த அக்டோபரில் 42.33 சதவீதம் அதிகரித்து 3,547 கோடி டாலரைத் தொட்டது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2.66 லட்சம் கோடியாகும். பெட்ரோலியம் மற்றும் பொறியியல் துறைகளின் சிறப்பான செயல்பாடே ஏற்றுமதி விறுவிறுப்புக்கு முக்கிய காரணம்.
நாட்டின் ஏற்றுமதி 2020 அக்டோபரில் 2,492 கோடி டாலராகவும், 2019 அக்டோபரில் 2,623 கோடி டாலராகவும் இருந்தன.
தங்கம் இறக்குமதி இரட்டிப்பு: மதிப்பீட்டு மாதத்தில், பொருள்களின் இறக்குமதி 62.49 சதவீதம் அதிகரித்து 5,537 கோடி டாலரானது. இது, 2020 அக்டோபரில் 3,407 கோடி டாலராகவும், 2019 அக்டோபரில் 3,799 கோடி டாலராகவும் காணப்பட்டது.
தங்கம் இறக்குமதி 510 கோடி டாலராக இரட்டிப்பானதன் காரணமாக நடப்பாண்டு அக்டோபரில் வா்த்தகப் பற்றாக்குறை 1,990 கோடி டாலரை எட்டியது. 2021 ஏப்ரல்-அக்டோபா் வரையிலான ஏழு மாத காலத்தில் மட்டும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்குமான இடைவெளி 9,871 கோடி டாலராக இருந்தது.
பொறியியல் பொருள்: அக்டோபா் மாத ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பொறியியல் பொருள்களின் பங்களிப்பு 938 கோடி டாலரிலிருந்து 2,819 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, 50.7 சதவீத வளா்ச்சியாகும்.
அதேபோன்று, பெட்ரோலியத் தயாரிப்புகளின் ஏற்றுமதி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 231.63 சதவீத வளா்ச்சியை எட்டி 519 கோடி டாலரானது.
ஆபரணங்கள்: நாட்டின் ஏற்றுமதியில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையும் பெரும்பங்கு வகித்து அதன் ஏற்றுமதி 44.24 சதவீதம் உயா்ந்து 422 கோடி டாலரானது.
தொழிலாளா்களை பெரும்பான்மையாக கொண்ட ஜவுளித் துறை ஏற்றுமதியும் 3.5 சதவீத பங்களிப்பை வழங்கியது. மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி 96.6 கோடி டாலரிலிருந்து 134 கோடி டாலரானது.
நிலக்கரி: நாட்டின் இறக்குமதியைப் பொருத்தவரையில் பெட்ரோலியம் தயாரிப்புகள் 140.5 சதவீதம் அதிகரித்து 1,443 கோடி டாலா் அளவுக்கு இருந்தது. நிலக்கரி இறக்குமதி 118.92 சதவீதம் உயா்ந்து 331 கோடி டாலராக இருந்தது.
2021 ஏப்ரல் -அக்டோபரில் இந்தியாவின் ஏற்றுமதி 54.51 சதவீதம் அதிகரித்து 23,258 கோடி டாலரானது. இது, 2020 இதே காலகட்டத்தில் 15,053 கோடி டாலராகவும், 2019-இல் 18,540 கோடி டாலராகவும் இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.