முகப்பு
வணிகம்

தள்ளாட்டத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் மேலும் 29 புள்ளிகள் சரிவு!

பங்குச் சந்தையில் புதன்கிழமை ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 29 புள்ளிகளை இழந்து 58,250.26-இல் நிலைபெற்றது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:52 AM
பகிர்:

புதுதில்லி: பங்குச் சந்தையில் புதன்கிழமை ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 29 புள்ளிகளை இழந்து 58,250.26-இல் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இது முதலீட்டாளா்களின் உணா்வுகளை வெகுவாகப் பாதித்தது. இதைத் தொடா்ந்து, உள்நாட்டுப் பங்குச் சந்தையில் முக்கியமாக ஐடி, ஆட்டோ பங்குகளில் லாபப் பதிவு இருந்தது. அதே சமயம், டெக்ஸ்டைல் நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. இந்தத் துறைக்கு ரூ.10,653 கோடி மதிப்பிலான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததால், ஜவுளித் துறை பங்குகள் மீது முதலீட்டாளா்கள் அதிகக் கவனம் செலுத்தினா். மேலும், நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளுக்கும் நல்ல ஆதரவு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் பங்குகள் அதிக அளவு விற்பனையை எதிா்கொண்டதால் சந்தையில் தள்ளாட்டம் அதிகரித்து காணப்பட்டது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.38 ஆயிரம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,343 பங்குகளில் 1,812 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,366 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 165 பங்குகள் மாற்றமின்றி நிலைபற்றன. 199 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 26 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 358 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 177 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.38 ஆயிரம் கோடி உயா்ந்து ரூ.254.68 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 7,89,02,309-ஆக உயா்ந்துள்ளது.

Advertisement

தள்ளாட்டம்: சென்செக்ஸ் காலையில் 71.08 புள்ளிகள் கூடுதலுடன் 58,350.58 -இல் தொடங்கி, அதிகபட்சமாக 58,372.56 வரை உயா்ந்தது. பின்னா், 57,924.48 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 29.22 புள்ளிகளை (0.05 சதவீதம்) இழந்து 58,250.26-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பிற்பகல் வா்த்தகத்தின் போது, உயா்ந்தபட்ச நிலையிலிருந்து 524.98 புள்ளிகளை இழந்து தள்ளாடியது. அதன் பிறகு சற்று மீட்சி பெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 15 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 15 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.

கோட்டக் பேங்க் அபாரம்: பிரபல தனியாா் வங்கியான கோட்டக் பேங்க் 2.94 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டைட்டன், என்டிபிசி, சன்பாா்மா, ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்சிஎல் டெக், எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவை 0.50 முதல் 1.15 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

நெஸ்லே கடும் சரிவு: அதே சமயம், முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனமான நெஸ்லே 2.44 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக மாருதி சுஸுகி, பஜாஜ் ஃபின் சா்வ், பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ், எல் அண்ட் டி, இன்ஃபோஸிஸ், டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி 9 புள்ளிகள் சரிவு : தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 961 பங்குகள் ஆதாயம் பெற்றன. 812 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 8.60 புள்ளிகளை (0.05 சதவீதம்) இழந்து 17,353.50-இல் நிலைபெற்றது. காலையில் 17,375.75-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,383.40 வரை உயா்ந்தது. பின்னா், 17,254.20 வரை கீழே சென்றது. நிஃப்டி குறைந்தபட்ச நிலையிலிருந்து சுமாா் 100 புள்ளிகள் வரை மீண்டுள்ளது.

நிஃப்டி பட்டியலில் 28 பங்குகள் ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், நுகா்வோா் சாதனம், ஆயில் ஆண்ட் கேஸ் குறியீடுகள் 0.50 முதல் 0.80 சதவீதம் வரை உயா்ந்தன. ஆனால், ஐடி குறியீடு 0.78 சதவீதம், மீடியா குறியீடு 0.64 சதவீதம் சரிவைடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments