முகப்பு
வணிகம்

2-ஆவது நாளாக சரிவு: 388 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சரிவை சந்தித்தது.  

Updated On : 22 ஜூலை, 2025 at 9:54 AM
பகிர்:



புதுதில்லி: பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சரிவை சந்தித்தது.  நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்  மேலும் 388 புள்ளிகளை இழந்தது. வங்கி தவிர்த்து மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் 1 முதல் 3 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான பங்கு விற்பனை ஆகியவை சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 

பிப்ரவரி மாதத்துக்கான தொழில்துறை உற்பத்தி மற்றும் மார்ச் மாதத்திற்கான பணவீக்க புள்ளிவிவரங்கள் சந்தை முடிந்த பிறகு வெளியாக இருந்த நிலையில், முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக பங்குத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ் உள்ளிட்டவை வெகுவாகக் குறைந்ததே சந்தை சரிவுக்கு முக்கியக் காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.  இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை ரூ.1,145.24 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளதாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2,316 நிறுவனப் பங்குகள் விலை சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,516 நிறுவனப் பங்குகளில் 1,110 மட்டுமே ஆதாயம் பெற்றன. அதே சமயம்,  2,316 பங்குகள் விலை குறைந்தன. 90  பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 179 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 9  பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன.  சந்தை மூலதன மதிப்பு ரூ.3.18 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.271.99 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 10.24 கோடியை  தாண்டியது.

மேலும் 388 புள்ளிகள் வீழ்ச்சி:

சென்செக்ஸ் காலையில் பலவீனத்துடன் 221.07 புள்ளிகள் குறைந்து 58,743.50}இல் தொடங்கி, 58,298.57 வரை கீழே சென்றது.

பின்னர், அதிகபட்சமாக 58,794.78 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 388.20 புள்ளிகள் (0.66  சதவீதம்)  குறைந்து 58,576.37}இல் நிறைவடைந்தது.  சந்தையில் நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. 

ஐடி, மெட்டல் பங்குகள் விலை சரிவு: 30 முதல்தரப்  பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 9 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. அதே சமயம், 21 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் பிரபல ஸ்டீல் நிறுவனமான டாடா ஸ்டீல் 2.76 சதவீதம், பிரபல ஐடி நிறுவனங்களான டெக் மஹிந்திரா 2.26 சதவீதம், விப்ரோ 2.16 சதவீதம் மற்றும் பார்தி ஏர்டெல் 2.15 சதவீதம் குறைந்தது. 
மேலும், ரிலையன்ஸ்,  எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின் சர்வ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்ஃபோசிஸ்,  அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐடிசி உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப்பட்டியலில் இருந்தன.

ஆக்ஸிஸ் பேங்க் 

முன்னேற்றம்: அதே சமயம், ஆக்ஸிஸ் பேங்க் 1.67 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், கோட்டக் பேங்க், பவர் கிரிட், மாருதி சுஸýகி,  ஐசிஐசிஐ பேங்க், இன்டஸ்இண்ட் பேங்க்,  எச்டிஎஃப்சி, நெஸ்லே இந்தியா உள்ளிட்டவையும் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 145 புள்ளிகள் வீழ்ச்சி:

தேசிய பங்குச் சந்தையில் 466 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இடம்பெற்றன. 1,473 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலுக்கு வந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 11 பங்குகள் ஆதாயம் பெற்றன. 39 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 

நிஃப்டி குறியீடு  144.65 புள்ளிகள் (0.82 சதவீதம்)  குறைந்து 17,530.30}இல் நிறைவடைந்தது. காலையில் 90.10 புள்ளிகள் குறைந்து 17,584.85}இல் வர்த்தகத்தை  தொடங்கிய நிஃப்டி, 17,442.35 வரை கீழே சென்றது.

பின்னர், அதிகபட்சமாக 17,595.30 வரை உயர்ந்தது. 

மெட்டல், ஐடி, ரியால்ட்டி குறியீடுகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில்  நிஃப்டி மெட்டல், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 2.40 முதல் 2.75 சதவீதம், ஐடி, மீடியா, பிஎஸ்யு பேங்க், ஆட்டோ, எஃப்எம்சிஜி  குறியீடுகள் 0.80 முதல் 1.50 சதவீதம் வரை குறைந்தன.   அதே சமயம், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க் குறியீடுகள் 0.40 சதவீதம் வரை உயர்ந்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.