ஐடி, வங்கிப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு: சென்செக்ஸ் 1,564 புள்ளிகள் முன்னேற்றம்
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் திடீரென "காளை' ஆதிக்கம் கொண்டது.
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் திடீரென "காளை' ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் ஒரே நாளில் 1,564 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 446 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.5.69 லட்சம் கோடி உயர்ந்தது.
அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவலின் கருத்தரங்கு ஒன்றில் வங்கி வட்டி விகித உயர்வு குறித்து சுட்டிக் காட்டியதைத் தொடர்ந்து, அமெரிக்க சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. இதன் தாக்கம் இந்தியா உள்பட உலகளாவிய பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை எதிரொலித்தது. இதனால், பெரும் சரிவைச் சந்தித்தன. இருப்பினும், செவ்வாய்க்கிழமை உள்நாட்டுச் சந்தையில் ஆரம்பத்தில் சிறிதளவே உயர்ந்தாலும், நேரம் செல்லச் செல்ல காளை முழு ஆதிக்கம் கொண்டது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், உள்நாட்டுப் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை மற்றும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் மீண்டும் சந்தைக்கு திரும்பியது உள்ளிட்டவை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த சில நாள்களாக தொடர்ந்து ஏற்பட்ட சரிவால் முன்னிலை நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு ஆர்வம் அதிகரித்ததால், சந்தை திடீர் எழுச்சி பெற்றுள்ளது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
குறிப்பாக ஐடி, வங்கிப் பங்குகளுக்கு கிடைத்த நல்ல வரவேற்பு, சந்தை வலுப்பெற உதவியது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை அன்று ரூ.561.22 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
2,328 பங்குகள் விலை உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,552 நிறுவனப் பங்குகளில் 1,095 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 2,328 பங்குகள் விலையுயர்ந்த பட்டியலில் இடம் பெற்றன. 129 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 220 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 22 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.5.69 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.280.25 லட்சம் கோடியாக இருந்தது.
சென் செக்ஸ் எழுச்சி: காலையில் 287.23 புள்ளிகள் கூடுதலுடன் 58,259.85-இல் தொடங்கிய சென்செக்ஸ், 58,245.49 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 59,599.78 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 1,564.45 புள்ளிகள் (2.70 சதவீதம்) உயர்ந்து 59,537.07-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் "காளை' முழு ஆதிக்கத்தில் இருந்தது.
டெக் மஹிந்திரா கடும் சரிவு:சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. இதில் பிரபல தனியார் நிதி நிறுவனமான பஜாஜ் ஃபின் சர்வ் 5.47 சதவீதம் உயர்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, பஜாஜ் ஃபைனான்ஸ் 4.86 சதவீதம், இண்டஸ் இண்ட் பேங்க் 4.38 சதவீதம் உயர்ந்தன. மேலும், டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனி லீவர், எச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், மாருதி சுஸுகி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் 3 முதல் 4 சதவீதம் வரை உயர்ந்தன. ஐடி நிறுவனங்களான இன்ஃபோஸிஸ், விப்ரோ, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக் மற்றும் மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ் உள்ளிட்டவையும் விலையுயர்ந்த பட்டியலில் இடம் பெற்றன.
நிஃப்டி 246 புள்ளிகள் வீழ்ச்சி:
தேசிய பங்குச் சந்தையில் 488 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 1,465 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளும் விலையுயர்ந்த பட்டியலில் இருந்தன. வர்த்தக முடிவில் நிஃப்டி 446.40 புள்ளிகள் (2.58 சதவீதம்) உயர்ந்து 17,759.30-இல் நிலைபெற்றது. காலையில் 102.05 புள்ளிகள் கூடுதலுடன் 17,414.95-இல் தொடங்கிய நிஃப்டி, 17,401.50 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 17,777.65 வரை உயர்ந்தது.