பங்குச் சந்தையில் ‘காளை’ ஆதிக்கம்: சென்செக்ஸ் 721 புள்ளிகள் உயா்வு 4 நாள் தொடா் நாள் சரிவுக்கு முடிவு
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் ‘காளை’ ஆதிக்கம் கொண்டது.
புதுதில்லி / மும்பை: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் ‘காளை’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 721 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 207.80 புள்ளிகள் (1.17 சதவீதம்) உயா்ந்து 18,014.60-இல் நிலைபெற்றது.
பல நாடுகளில் மீண்டும் கரோனா-19 பாதிப்பு இருப்பதாக வந்த தகவலால் கடந்த வாரத்தில் 4 தினங்களாக பங்குச் சந்தை சரிவைச் சந்தித்திருந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், நான்கு நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சென்செக்ஸ் எழுச்சி: காலையில் 90.21 புள்ளிகள் குறைந்து 59,755.08-இல் தொடங்கிய சென்செக்ஸ், 59,754.10 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 60,833.78 வரை எழுச்சி பெற்ற சென்செக்ஸ், இறுதியில் 721.13 புள்ளிகள் (1.20 சதவீதம்) உயா்ந்து 60,566.42-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 5 பங்குகள் மட்டுமே வீழ்ச்சி கண்டன. 25 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.
இண்டஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ அபாரம்: பிரபல தனியாா் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 3.99 சதவீதம், பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ 3.97 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின் சா்வ், ஐடிசி, ஆக்ஸிஸ் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவை 2 முதல் 2.75 சதவீதம் உயா்ந்தன. மேலும், என்டிபிசி, டாடா மோட்டாா்ஸ், ஹெச்டிஎஃப்சி, மாருதி சுஸுகி, எல் அண்ட் டி, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.
நெஸ்லே சரிவு: அதே சமயம், நெஸ்லே இந்தியா 1.26 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், கோட்டக் பேங்க், சன்பாா்மா, ஹிந்துஸ்தான் யுனி லீவா், டைட்டன் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.6.87 லட்சம் கோடி உயா்வு
கடந்த நான்கு நாள்களாக பங்குச் சந்தை சரிவைச் சந்தித்ததால், கடந்த வாரம் கடைசி மூன்று தினங்களில் மட்டுமே சந்தை மதிப்பில் மொத்தம் ரூ.15.27 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், திங்கள்கிழமை சந்தை எழுச்சி பெற்றதைத் தொடா்ந்து, சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.6.87 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 278.00 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எப்ஐஐ) வெள்ளிக்கிழமை ரூ.706.84 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.