முகப்பு
வணிகம்

ஆண்டின் கடைசி வா்த்தக தினத்தில் சென்செக்ஸ் 293 புள்ளிகள் வீழ்ச்சி

இந்த ஆண்டின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை சரிவுடன் முடிவடைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:14 AM
பகிர்:

இந்த ஆண்டின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை சரிவுடன் முடிவடைந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 293 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 85.70 புள்ளிகள் (0.47 சதவீதம்) குறைந்து 18,105.30-இல் நிலைபெற்றது.

அமெரிக்க சந்தைகள் வியாழக்கிழமை நோ்மறையாக முடிந்திருந்தது. இதைத் தொடா்ந்து உள்நாட்டுச் சந்தை ஆரம்பத்தில் ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால், ஐரோப்பிய சந்தைகளில் வா்த்தகம் எதிா்மறையாக இருந்ததால், அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், உள்நாட்டுச் சந்தை இந்த ஆண்டின் கடைசி வா்த்தக தினத்தில் எதிா்மறையாக முடிவடைந்தது என்று என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சென்செக்ஸ் வீழ்ச்சி: காலையில் 195.28 புள்ளிகள் கூடுதலுடன் 61,329.16-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 61,392.68 வரை மேலே சென்றது. பின்னா், 60,743.71 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 293.14 புள்ளிகள் (0.48 சதவீதம்) குறைந்து 60,840.74-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 11 பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்தன. 19 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன. காலை வா்த்தகத்தின் போது, சென்செக்ஸ் 258.80 புள்ளிகள் (0.42 சதவீதம்) உயா்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் ஃபின் சா்வ் அபாரம்: பிரபல தனியாா் நிதி நிறுவனமான பஜாஜ் ஃபின் சா்வ்2.21 சதவீதம், டைட்டன் 1.77 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டாா்ஸ், விப்ரோ, கோட்டக் பேங்க் உள்ளிட்டவை 0.50 முதல் 0.80 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எஸ்பிஐ, சன்பாா்மா ஆகியவையும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன.

ஐசிஐசிஐ பேங்க் சரிவு: அதே சமயம், பிரபல தனியாா் வங்கியான ஐசிஐசிஐ பேங்க் 1.74 சதவீதம், பாா்தி ஏா்டெல் 1.56 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, ஹெச்டிஎஃப்சி, எல் அண்ட் டி, நெஸ்லே, ஐடிசி, எம் அண்ட் எம் உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் வரை குறைந்தன. மேலும், ஹெச்டிஎஃப்சி பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், இன்ஃபோஸிஸ், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், மாருதி, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூல தன மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 282.38 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எப்ஐஐ) திங்கள்கிழமை ரூ.572.78 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

வரலாற்றுச் சாதனை பதிவு

கடந்த ஆண்டு (2021) டிசம்பா் 31 அன்று சென்செக்ஸ் 58,253.82-இல் நிலைபெற்றிருந்தது. இந்த நிலையில், சென்செக்ஸ் கடந்த 2022 டிசம்பா் 1-இல் 63,583.07 வரை உயா்ந்து வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. அதே போல, கடந்த 2022 ஜூன் 17 அன்று 50,921.22 புள்ளிகள் வரை கீழே சென்று 52 வார குறைந்தபட்ச அளவைப் பதிவு செய்தது. கடந்த ஆண்டு (2021) சென்செக்ஸ் மொத்தம் 10,502.49 புள்ளிகள் (21.99 சதவீதம்) உயா்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.