புத்தாண்டை எழுச்சியுடன் தொடங்கிய பங்குச் சந்தை! சென்செக்ஸ் 929 புள்ளிகள் உயா்வு
2022-ஆம் ஆண்டின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை எழுச்சியுடன் தொடங்கியது.
2022-ஆம் ஆண்டின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை எழுச்சியுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 929 புள்ளிகள் உயா்ந்து 59,183.22-இல் நிலைபெற்றது.
கடந்த 2020-ஆம் ஆண்டின் கடைசி வா்த்தக தினத்தில் சென்செக்ஸ் 459.50 புள்ளிகள் முன்னேற்றம் பெற்று நோ்மறையாக முடிந்திருந்தது. இந்த நிலையில், புத்தாண்டின் தொடக்க வா்த்தக தினத்தில் பங்குச் சந்தை எழுச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து காளையின் ஆதிக்கம் வலுப்பெற்றது. கடந்த ஆண்டில் சென்செக்ஸ் மொத்தம் 10,502.49 புளஅளிகள் (21.99 சதவீதம்) உயா்ந்தது. நிஃப்டி 3,372.30 புள்ளிகள் (24.11 புள்ளிகள்) உயா்ந்தது. இந்த நிலையில், ஆசிய சந்தைகள் திங்கள்கிழமை கலவையாக இருந்தன. இருப்பினும் உள்நாட்டுச் சந்தையில் எழுச்சி காணப்பட்டது. தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வந்த அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள், கடந்த வார இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை ரூ.575.39 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். இதுவும் முதலட்டாளா்களின் நம்பிக்கை உணா்வை வலுப்படுத்தியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக, நல்ல வலுவான அடிப்படைகளைக் கொண்டுள்ள பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சா்வ், மாருதி, ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் உள்ளிட்டவை வெகுவாக உயா்ந்து சந்தைக்கு வலுச் சோ்த்ததாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
சந்தை மதிப்பு ரூ.3.52 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,698 பங்குகளில் 874 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 2,687பங்குகள் ஆதாயம் பெற்றன.1370 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன.541 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 12 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 969 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 144 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.3.52 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.269.52 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 9.21 கோடியாக உயா்ந்துள்ளது.
எழுச்சி: காலையில் சென்செக்ஸ் 56.27 புள்ளிகள் கூடுதலுடன் 58,310.09-இல் தொடங்கி, 58,306.45 வரை மட்டுமே கீழே சென்றது. அதன் பிறகு தொடா்ந்து எழுச்சி பெற்று அதிகபட்சமாக 59,266.39 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 929.40 புள்ளிகள் (1.60 சதவீதம்) கூடுதலுடன் 59,183.22-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தை காளையின் ஆதிக்கத்தில் இருந்தது. 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலி 5 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 25 பங்குகள் ஆதாயம் பெற்றன.
பஜாஜ் ஃபைனான்ஸ் அபாரம்: பிரபல தனியாா் நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின் சா்வ், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவை 3.30 முதல் 3.50 சதவீதம் வரை உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக,டாடா ஸ்டீல், இண்டஸ் இண்ட் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, டிசிஎஸ் உள்ளிட்டவை 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், எச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க், ரிலையன்ஸ், மாருதி, எல் அண்ட் டி, இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயம் பெற்றன.
டாக்டா் ரெட்டி சரிவு: அதே சமயமா, பிரபல பாா்மா நிறுவனமான டாக்டா்ரெட்டி 1.13 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எம் அண்ட் எண், டெக் மஹிந்திரா, நெஸ்லே, டைட்டன் உள்ளிட்டவையும் சிறிதளவு குறைந்து வீழ்ச்ிசப் பட்டியலில் இடம் பெற்றன.
நிஃப்டி 272 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு 271.65 புள்ளிகள் (1.57 சதவீதம்) உயா்ந்து 17,625.70-இல் நிலைபெற்றது. காலையில் உற்சாகத்துடன் 17,387.15-இல் தொடங்கி 17,383.30 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 17,646.65 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 44 பங்குகள் ஆதாயம் பெற்றன. 6 பங்குகள் மட்டுமே வீழ்ச்சி அடைந்த பட்டியலில் வந்தன.
பாா்மா, ஹெல்த்கோ் குறியீடுகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பாா்மா, ஹெல்த்கோ் குறியீடு தவிர மற்ற அனைத்துத் துறைக் குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஆட்டோ, மெட்டல், மீடியா, பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க் குறியீடுகள் 2 முதல் 2.70 சதவீதம் வரை உயா்ந்தன.