முகப்பு
வணிகம்

சென்செக்ஸ் 98 புள்ளிகள் வீழ்ச்சி!

பங்குச் சந்தை தொடா்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழைமையும் எதிா்மறையாக முடிந்தது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:56 AM
பகிர்:

புதுதில்லி: பங்குச் சந்தை தொடா்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழைமையும் எதிா்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 98 புள்ளிகளை இழந்தது. வங்கி, ஐடி நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா் கொண்டதே சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. அமெரிக்காவின் பணவீக்கத் தரவுகள் எதிா்பாா்ப்பையும் விட அதிகமாக இருந்தது. இருப்பினும், அந்த நாட்டுச் சந்தையில் அதன் பாதிப்பு பெரிதாக இல்லை.இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால், ஐரோப்பியா, ஆசிய சந்தைகள் பலவீனமடைந்ததைத் தொடா்ந்து, உள்நாட்டுச் சந்தையிலும் பங்குகள் விற்பனை சூடுபிடித்தன. இதனால், நான்காவது நாளாக தொடா் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது. மேலும், முன்பேர வா்த்தகத்தில் வாராந்திர கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக இருந்ததால், ஏற்ற, இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

1,940 பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,462 நிறுவனப் பங்குகளில் 1,382 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,940 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 140 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 71 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 29 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.38 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.250.66 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் 98 புள்ளிகள் இழப்பு: காலையில் 174.47 புள்ளிகள் கூடுதலுடன் 53,688.62-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 53,861.28 வரை மேலே சென்றது. பின்னா், 53,163.77 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 98 புள்ளிகள் (0.18 சதவீதம்) குறைந்து 53,416.15-இல் நிலைபெற்றது.

ஆக்ஸிஸ் பேங் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 12 பங்குகள் ஆதாயம் பெற்றன. 18 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. இதில், தனியாா் வங்கியான ஆக்ஸிஸ் பேங்க் 1.74 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஹெச்சிஎல் டெக், எஸ்பிஐ, டெக் மஹிந்திரா, டிசிஎஸ், விப்ரோ, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐடிசி, இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் வரை குறைந்தன. மேலும், எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின் சா்வ் ஐடிசி, பாா்தி ஏா்டெல் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

சன்பாா்மா முன்னேற்றம்: அதே சமயம், பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான சன்பாா்மா 2.22 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, டாக்டா் ரெட்டி, கோட்டக் பேங்க், மாருதி சுஸுகி உள்ளிட்டவை 1.50 முதல் 1.75 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், டைட்டன், ரிலையன்ஸ், நெஸ்லே டாடா ஸ்டீல், பவா் கிரிட் உள்ளிட்டவையும் சிறிதளவு உயா்ந்துஆதாயப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 92 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 666 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,268 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 21 பங்குகள் ஆதாயப் பட்டியலும், 29 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன. வா்த்தக முடிவில் நிஃப்டி 28.00 புள்ளிகள் (0.18 சதவீதம்) குறைந்து 15,938.65-இல் நிலைபெற்றது. காலையில் சுமாா் 52.20 புள்ளிகள் கூடுதலுடன் 16,018.85-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 16,070.85 வரை உயா்ந்தது. பின்னா்,15,858.20 வரை கீழே சென்றது.

முழு கட்டுரையைப் படிக்க →