மேலும் 246 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது.
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 246 புள்ளிகள் உயர்ந்தது. இதனால், பங்குச் சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றத்துடன் முடிவடைந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்ததையடுத்து பலவீனமாகத் தொடங்கிய சந்தையில் வர்த்தகம் மந்தமாக இருந்தது. அதன் பிறகு காளை ஆதிக்கம் கொண்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சற்று முன்னேற்றம் கண்டதும் சந்தைக்கு சாதகமாக அமைந்தது.
ஐடி, பார்மா துறை பங்குகள் விற்பனையை எதிர்கொண்ட நிலையில், வங்கி, எரிசக்தி, உலோகத் துறை பங்குகளுக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
1,975 பங்குகள் விலை உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,454 நிறுவனப் பங்குகளில் 1,337 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 1,975 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 142 பங்குகள் மாற்றமின்றியும் இருந்தன. 98 நிறுவனப் பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும்,19 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.15 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.256.55 லட்சம் கோடியாக இருந்தது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 269.27 புள்ளிகள் குறைந்து 54,251.88-இல் தொடங்கிய சென்செக்ஸ், 54,232.82 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 54,817.52 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 246.47 புள்ளிகள் (0.45 %) உயர்ந்து 54,767.62-இல் நிலைபெற்றது.
ஆக்ஸிஸ் பேங்க் முன்னேற்றம்:
சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 10 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலிலும், 20 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இடம்பெற்றன. இதில், பிரபல தனியார் வங்கியான ஆக்ஸிஸ் பேங்க் 2.35 சதவீதம், இன்டஸ்இண்ட் பேங்க் 2.09 சதவீதம் உயர்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தன.
இதற்கு அடுத்ததாக எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் ஃபின்சர்வ், எஸ்பிஐ, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தன. மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி, என்டிபிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், டிசிஎஸ், மாருதி சுஸýகி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
நெஸ்லே சரிவு: அதே சமயம், பிரபல நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான நெஸ்லே இந்தியா 1.27 சதவீதம், முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக் 1.14 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், சன்பார்மா, கோட்டக் பேங்க், டாக்டர் ரெட்டீஸ் லேப் , இன்ஃபோசிஸ், ஐடிசி உள்ளிட்டவை விலை குறைந்த பட்டியலில் வந்தன.
0.38% உயர்ந்த நிஃப்டி: தேசிய பங்குச் சந்தையில் 1,196 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 752 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. "நிஃப்டி 50' பட்டியலில் 29 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 21 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இடம்பெற்றன. வர்த்தக முடிவில் நிஃப்டி 62.05 புள்ளிகள் (0.38 %) உயர்ந்து 16,340.55-இல் நிலைபெற்றது.