4-ஆவது நாளாக எழுச்சி: மேலும் 630 புள்ளிகள் முன்னேறியது சென்செக்ஸ்!
இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச் சந்தை எழுச்சியுடன் தொடங்கி நோ்மறையாக முடிந்தது.
புதுதில்லி: இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச் சந்தை எழுச்சியுடன் தொடங்கி நோ்மறையாக முடிந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயா்ந்தது. ஐடி, ஆயில் நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், பங்குச் சந்தை தொடா்ந்து நான்காவது நாளாக உயா்ந்து நிலைபெற்றுள்ளது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், கடந்த இரண்டு நாள்களாக நல்ல செய்திகள் வந்த வண்ணம் இருப்பதும் சந்தை ஏறுமுகம் பெறுவதற்கு உதவியாக இருந்தது. காா்ப்ரேட் நிறுவனங்களின் வருவாய் நன்றாக இருப்பதால் அமெரிக்க சந்தைகள் ஏற்றம் பெற்றுள்ளன. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகள் விற்பனை குறைந்துள்ளது. அதற்கு மாறாக தொடா்ந்து இரண்டாவது நாளாக ரூ.976.40 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். மத்திய அரசு ஆயில் நிறுவனங்களுக்கு ஆதாய வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது ரிலையன்ஸ் உள்ளிட்ட சில ஆயில் நிறுவனப் பங்குகளுக்கு சாதகமாக அமைந்தது. மேலும், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதும் சந்தைக்கு சாதகமாக அமைந்தது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
1,928 பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,489 நிறுவனப் பங்குகளில் 1,428 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 1,928 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 133 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 115 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 22 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.58 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.258.13 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முத்லீட்டாளா்களின் எண்ணிக்கை 11 கோடியைத் தாண்டியது.
4-ஆவது நாளாக முன்னேற்றம்: காலையில் 718.50 புள்ளிகள் கூடுதலுடன் 55,486.12-இல் தொடங்கிய சென்செக்ஸ், குறைந்தபட்சமாக 55,298.23 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 55,630.26 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 629.91 புள்ளிகள் (1.15 சதவீதம்) உயா்ந்து 55,397.53-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் தொடா்ந்து நான்காவது நாளாக ஏற்றம் பெற்றுள்ளது.
டெக் மஹிந்திராஅபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 8 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 22 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில், பிரபல ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா 3.84 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், ரிலையன்ஸ், எஸ்பிஐ, இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவை 2 முதல்ந 3 சதவீதம் வரை உயா்ந்தன. விப்ரோ, ஹிந்துஸ்தான் யுனி லீவா், எச்டிஎஃப்சி பேங்க், டைட்டன், ஐடிசி, நெஸ்லே, இண்ட்ஸ் இண்ட் பேங்க் ஆகியவை 1 முதல் 1.6 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், டாடா ஸ்டீல், மாருதி, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.
எம் அண்ட் எம் சரிவு: அதே சமயம், எம் அண்ட் எம் 1.81 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், சன்பாா்மா, கோட்டக் பேங்க், பாா்தி ஏா்டெல், பவா் கிரிட், பஜாஜ் ஃபின்சா்வ், ஏசியன் பெயிண்ட், என்டிபிசி உள்ளிட்டவையும் விலைகுறைந்த பட்டியலில் வந்தன.
நிஃப்டி 180 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,119 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 826 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 34 பங்குகள் ஆதாயப் பட்டியலும், 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன. வா்த்தக முடிவில் நிஃப்டி 180.30 புள்ளிகள் (1.15 சதவீதம்) உயா்ந்து 16,520.85-இல் நிலைபெற்றது.