முகப்பு
வணிகம்

2 நாள் உற்சாகத்துக்கு முற்றுப்புள்ளி: 778 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

உக்ரைன் பிரச்னை மேலும் மோசமடைந்துள்ளதைத் தொடர்ந்து, பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்தித்தது

Updated On : 22 ஜூலை, 2025 at 9:54 AM
பகிர்:

உக்ரைன் பிரச்னை மேலும் மோசமடைந்துள்ளதைத் தொடர்ந்து, பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்தித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 778 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. இதையடுத்து, இரண்டு நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
 உக்ரைன்-ரஷியா போர் மோசமடைந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் கவலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால், இந்திய சந்தைகள் அவற்றின் முந்தைய நாளில் இருந்து ஒரு சதவீதம் குறைவாகவே தொடங்கியது. ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 7ஆவது நாளை எட்டியதின் தாக்கம், உலகச் சந்தைகளில் எதிரொலித்தது. ரஷியா தாக்குதலை முடுக்கி விட்டதாலும், மேற்கத்திய நாடுகள் மாஸ்கோவை கடுமையான தடைகளுடன் தண்டித்ததாலும், எண்ணெய் மற்றும் எரிவாயு விலை பீப்பாய்க்கு 5% -க்கும் மேல் உயர்ந்து 110 டாலரை தாண்டியது. அதன் தாக்கத்தால், பங்குச் சந்தை சரிவுடன் முடிந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை ரூ.3,948.47 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனர்.
 1,652 பங்குகள் விலை வீழ்ச்சி:
 மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,458 பங்குகளில் 1,692 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,652 பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்தன. 114 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 73 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 34 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 9.86 கோடியாக உயர்ந்துள்ளது.
 778 புள்ளிகள் சரிவு:
 சென்செக்ஸ் காலையில் 617.98 புள்ளிகள் குறைந்து 55,629.30-இல் தொடங்கி, அதிகபட்சமாக 55,755.09 வரை உயர்ந்தது. பின்னர், 55,020.10 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 778.38 புள்ளிகள் (1.38 சதவீதம்) குறைந்து 55,468.90-இல் நிலைபெற்றது.
 டாடா ஸ்டீல் அபாரம்:
 சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 7 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 23 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில், டாடா ஸ்டீல் 5.54 சதவீதம் உயர்ந்து பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது நாளாக முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, டைட்டன், நெஸ்லே, ஆக்ஸிஸ் பேங்க், பவர் கிரிட், பஜாஜ் ஃபின் சர்வ் உள்ளிட்டவை 0.20 முதல் 1.90 சதவீதம் வரை உயர்ந்தன.
 மாருதி சுஸýகி கடும் சரிவு:
 அதே சமயம், பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸýகி 6 சதவீதம், டாக்டர் ரெட்டீஸ் 5.14 சதவீதம், ஏஷியன் பெயிண்ட் 4.53 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், சன் பார்மா, பஜாஜ் ஃபைனான்ஸ், கோட்டக் பேங்க் உள்ளிட்டவை 2 முதல் 3.75 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், எஸ்பிஐ, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, விப்ரோ, ஹெச்யுஎல் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
 நிஃப்டி 188 புள்ளிகள் வீழ்ச்சி:
 தேசிய பங்குச் சந்தையில் 901 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,003 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 187.95 புள்ளிகள் (1.12 சதவீதம்) குறைந்து 16,605.95-இல் நிலைபெற்றது. காலையில் சுமார் 200 புள்ளிகள் குறைந்து 16,593.10 -இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 16,678.50 வரை உயர்ந்தது. பின்னர், 16,478.65 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல்தரப் பங்குகளில் 16 பங்குகள் ஆதாயம் பெற்றன. 34 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.
 மெட்டல் குறியீடு முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மெட்டல் குறியீடு 4.07 சதவீதம், ஆயில் அண்ட் காஸ் குறியீடு 1.20 சதவீதம், மீடியா 1.87 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. இதில், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ், ஆட்டோ, பார்மா, பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், ஹெல்த்கேர், ரியால்ட்டி குறியீடுகள் 1 முதல் 3 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன.
 முதலீட்டாளர்களுக்கு ரூ.86,742 கோடி இழப்பு
 ரஷியா-உக்ரைன் இடையேயான பதற்றமான சூழலால் சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி இந்திய சந்தைகளிலும் எதிரொலித்ததையடுத்து சந்தை மூலதனமதிப்பு ரூ.2,51,52,303.35 கோடியாக சரிவடைந்தது. இதையடுத்து, முதலீட்டாளர்களுக்கு புதன்கிழமை வர்த்தகத்தில் மட்டும் ரூ.86,741.74 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →