ஐடி, வங்கி, ஆட்டோ பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 740 புள்ளிகள் முன்னேற்றம்
பங்குச் சந்தை தொடர்ந்து 3-ஆவது நாளாக புதன்கிழமையும் நேர்மறையாக முடிந்தது. காளையின் ஆதிக்கம் தொடர்ந்ததால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 740 புள்ளிகள் உயர்ந்தது
பங்குச் சந்தை தொடர்ந்து 3-ஆவது நாளாக புதன்கிழமையும் நேர்மறையாக முடிந்தது. காளையின் ஆதிக்கம் தொடர்ந்ததால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 740 புள்ளிகள் உயர்ந்தது.
ரஷியா - உக்ரைன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டியதால், அமெரிக்க பங்குச் சந்தைகள் ஆதாயம் பெற்றன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக, மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாக உயர்ந்து சந்தைக்கு பெரும் ஆதரவாக இருந்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
2,121 நிறுவனப் பங்குகள் விலை உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,507 நிறுவனப் பங்குகளில் 2,121 பங்குகள் விலை உயர்ந்திருந்தன. அதே சமயம், 1,281 பங்குகள் விலை வீழ்ச்சியடைந்தன. 105 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 136 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 62 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.29 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.263.91 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 10.13 கோடியாக உயர்ந்துள்ளது.
3-ஆவது நாளாக முன்னேற்றம்:
சென்செக்ஸ் காலையில் 419.20 புள்ளிகள் கூடுதலுடன் 58,362.85-இல் தொடங்கி, 58,176.00 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 58,727.78 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 740.34 புள்ளிகள் (1.28 சதவீதம்) உயர்ந்து 58,683.99-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடர்ந்து சந்தை 3-ஆவது நாளாக ஏற்றம் பெற்றுள்ளது.
பஜாஜ் ஃபின் சர்வ அபாரம்: 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 9 பங்குகள் மட்டும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில், பிரபல தனியார் நிதி நிறுவனமான பஜாஜ் ஃபின் சர்வ் 3.82 சதவீதம், பஜாஜ் ஃபைனான்ஸ் 3.09 சதவீதம் உயர்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, எம் அண்ட் எம், பவர் கிரிட், நெஸ்லே, மாருதி, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் உள்ளிட்டவை 2 முதல் 2.60 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃ)ப்சி பேங்க், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை உயர்ந்த பட்டியலில் இருந்தன.
ஐடிசி சரிவு: அதே சமயம், கடந்த ஒரு வாரத்தில் 10 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்திருந்த பிரபல நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான ஐடிசி, புதன்கிழமை 2.16 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, பார்தி ஏர்டெல், டைட்டன், இண்டஸ் இண்ட் பேங்க், விப்ரோ, ஹெச்சிஎல் டெக், எஸ்பிஐ உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 173 புள்ளிகள் உயர்வு:
தேசிய பங்குச் சந்தையில் 1,256பங்குகள் ஆதாயம் பெற்றன. 660 பங்குகள் மட்டுமே நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 172.95 புள்ளிகள் (1.00 சதவீதம்) உயர்ந்து 17,498.25-இல் நிறைவடைந்தது. காலையில் 142.85 புள்ளிகள் கூடுதலுடன் 17,468.15-இல் தொடங்கிய நிஃப்டி, 17,387.20 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 17,522.50 வரை உயர்ந்தது.
ஃபைனான்சியல் சர்வீஸஸ் குறியீடு முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மீடியா குறியீடு 2.28 சதவீதம், ஃபைனான்சியல் சர்வீஸஸ் 2.00 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் 1.20 முதல் 1.60 சதவீதம் வரை உயர்ந்தன. அதேசமயம், மெட்டல் குறியீடு 2.17 சதவீதம் குறைந்தது. மேலும், பார்மா, ஹெல்த்கேர், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகளும் சிறிதளவு சரிவைச் சந்தித்தன.