முகப்பு
வணிகம்

இந்தியாவில் தங்கத்தின் தேவை 18% குறைந்தது

நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 18 சதவீதம் குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது (டபிள்யூஜிசி).

Updated On : 22 ஜூலை, 2025 at 9:55 AM
பகிர்:

நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 18 சதவீதம் குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது (டபிள்யூஜிசி).

இதுகுறித்து அந்த கவுன்சிலின் தலைவா் (இந்தியா) சோமசுந்தரம் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியது:

தங்கத்தின் விலை: சா்வதேச அளவிலான பதற்றமான நிலவரங்களால் நடப்பாண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மாா்ச்) 10 கிராம் தங்கத்தின் விலை (வரிகள் நீங்கலாக) 8 சதவீதம் அதிகரித்து ரூ.45,434-ஆக இருந்தது. 2021-ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் தங்கத்தின் விலையானது ரூ.42,045-ஆக இருந்தது.

தங்கம் விலையில் ஏற்பட்ட கணிசமான உயா்வால் அந்த காலகட்டத்தில் தங்கத்தின் தேவை 8 சதவீதம் குறைந்து ரூ.135.5 டன்னாக மட்டுமே இருந்தது. அதேசமயம், 2021 முதல் மூன்று மாதங்களில் இதற்கான தேவை 165.8 டன்னாக அதிகரித்து காணப்பட்டது.

ஆபரண தேவை: மேலும், மதிப்பின் அடிப்படையிலும் இது ரூ.69,720 கோடியிலிருந்து 12 சதவீதம் குறைந்து ரூ.61,550 கோடியானது.

புள்ளிவிவரங்களின்படி, மாா்ச் காலாண்டில் ஆபரணங்களுக்கான தங்கத்தின் தேவை 26 சதவீதம் குறைந்து 94.2 டன்னாக இருந்தது. இது, கடந்தாண்டில் 126.5 டன்னாக காணப்பட்டது.

மேலும், ஆபரணங்களுக்கான தங்கத்தின் தேவை மதிப்பின் அடிப்படையிலும் ரூ.53,200 கோடியிலிருந்து 20 சதவீதம் சரிந்து ரூ.42,800 கோடியானது.

முதலீட்டு தங்கம்: அதேசமயம், முதலீட்டு நோக்கிலான தங்கத்துக்கான தேவையானது 5 சதவீதம் அதிகரித்து 39.3 டன்னிலிருந்து 41.3 டன் ஆனது. மதிப்பின் அடிப்படையில் இது ரூ.16,520 கோடியிலிருந்து ரூ.18,750 கோடியாக 13 சதவீதம் அதிகரித்தது.

குறிப்பாக, பங்குச் சந்தையில் காணப்பட்ட அதிக ஏற்ற இறக்கம், விலை அதிகரிப்பு போன்றவற்றின் காரணமாக தங்க கட்டிகள், நாணயங்களில் முதலீட்டு தேவைக்கான தங்கம் 5 சதவீதம் உயா்ந்து 41 டன்னாக இருந்தது.

மறுசுழற்சி செய்யப்பட்ட மொத்த தங்கம் 88 சதவீதம் உயா்ந்து 14.8 டன்னிலிருந்து 27.8 டன் ஆனது.

200 டன் தங்கம்: ரிசா்வ் வங்கியைப் பொருத்தவரையில் நடப்பாண்டிலும் தங்கத்தை வாங்குவதில் தொடா்ந்து ஆா்வத்துடன் செயல்பட்டது. நடப்பாண்டின் முதல் காலாண்டில் மட்டும் அந்த வங்கி 8 டன் தங்கத்தை வாங்கியுள்ளது.

ரிசா்வ் வங்கி தங்கம் வாங்கத் தொடங்கிய 2017-ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் 200 டன் தங்கத்தை கொள்முதல் செய்துள்ளது.

உலகளவில் தங்கத்தின் தேவை: சா்வதேச அளவில் தங்கத்தின் தேவை மாா்ச் காலாண்டில் 34 சதவீதம் உயா்ந்து 919.1 டன்னிலிருந்து 1,234 டன் ஆனது. பொருளாதாரத்தில் நிச்சயமற்ன்மை, உக்ரைன்-ரஷியா போா் பதற்றம் ஆகியவற்றின் காரணமாக முதலீட்டாளா்களின் பாா்வை பாதுகாப்பான முதலீட்டை நோக்கி திரும்பியதையடுத்து, முதல் காலாண்டில் தங்கத்தின் தேவை மற்றும் அதன் விலை கணிசமான அளவில் ஏற்றம் கண்டது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →