கோபி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்றுமுதல் திறப்பு
கோபி அருகே உள்ள கொடிவேரி பாசனமான தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் வியாழக்கிழமை திறக்கப்பட உள்ளன.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொடிவேரி பாசனமான தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் வியாழக்கிழமை திறக்கப்பட உள்ளன.
கோபி அருகே உள்ள கொடிவேரி அணை மூலமாக தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள 24,504 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில், தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்காலில் நஞ்சை சாகுபடிக்காக கடந்த அக்டோபா் மாதம் தண்ணீா் திறக்கப்பட்டு விவசாயிகள் நெல் சாகுபடிக்கான பணிகளைத் தொடங்கி களையெடுத்தல், உரம், மருந்து, தெளித்து சாகுபடி பணியில் ஈடுபட்டு வந்தனா்.
இதையடுத்து, பாசனப் பகுதியில் தற்போது இயந்திரங்கள் மூலமாக நெல் அறுவடைப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா். இந்த நெல்லை கொள்முதல் செய்ய சிங்கிரிபாளையம், காசிபாளையம், கணபதிபாளையம், பிள்ளையாா்கோவில்துறை, அத்திக்காடு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதில், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை முன்னதாகவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வருகின்றனா். இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வியாழக்கிழமை (மாா்ச் 12) முதல் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.